| நன்னூல் விருத்தியுரை |
| மாணாக்கர் வகை |
| 38. | அன்ன மாவே மண்ணொடு கிளியே இல்லிக் குடமா டெருமை நெய்யரி அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். |
எ-னின், இதுவும் அது. இ-ள்: மேற் கூறிய அறுவருள் அன்னமும் பசுவும் போல்வார் தலைமாணாக்கர்; மண்ணும் கிளியும் போல்வார் இடைமாணாக்கர்; இல்லிக்குடமும் ஆடும் எருமையும் நெய்யரியும் போல்வார் கடைமாணாக்கர் எ-று. இவ்வுவமைத் திறமும் பொருள் திறமும் விரித்து உரைத்துக்கொள்க. (38) |
| மாணாக்கர் ஆகாதவர் |
| 39. | களிமடி மானி காமி கள்வன் பிணிய னேழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் றொன்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன் றறுகணன் பாவி படிறனின் னோர்க்குப் பகரார் நூலே. |
எ-னின், மாணாக்கர் ஆகார் இவர் என உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இக்குற்றங்களை உடையார்க்கு நூலைச் சொல்லார் ஆசிரியர் எ-று. (39) |
| கற்றலின் வரலாறு |
| 40. | கோடன் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவ னன்ன வார்வத்த னாகிச் சித்திரப் பாவையி னத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர். |
எ-னின், நிறுத்த முறையானே (3) மாணாக்கன் நூலைக் கற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கற்குமாறு இவ்வாறு எனச் சொல்லுவர் புலவர் எ-று. |