பக்கம் எண் : 137
  

நன்னூல் விருத்தியுரை
 

பயிற்சி முறை
 

41.

நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை
கடனாக் கொளினே மடநனி யிகக்கும்.
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: இவ்வாறு நூலைப் பயின்றவர்க்கு அறியாமை மிகுதியும் போம் எ-று. (41)
   

இருமுறை கேட்டலின் பயன்
 

42.

ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே.
    
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: ஒரு கால் கேட்ட துணையானே அமையாது, இருகால் கேட்பான் ஆயின்
அந்நூலின்கண் பிழைபாடு மிகுதியும் இலன் எ-று. (42)
 

மும்முறை கேட்டலின் பயன்

43.


முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: முக்காற் கேட்டான் ஆயின் ஆசிரியன் கற்பித்த முறை அறிந்து
உரைப்பன் எ-று. (43)
 

மாணாக்கன் புலமை பெறுமாறு

44.


ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல னாகும்.
    
     எ-னின்40 இதுவும் அது.

     இ-ள்: ஆசிரியன் கற்பித்தனவற்றைத் தன் அறிவின்கண் அமையக் கற்றான்
ஆயினும் புலமைத் திறத்தில் காற்கூறல்லது பற்றான் எ-று. (44)
----------------------------
     40கூழங்கைத் தம்பிரான் இந்நூற்பாவோடு இதற்கு அடுத்த நூற்பாவையும் சேர்த்து ஒரு நூற்பாவாகக் கொள்வார்.