| நன்னூல் விருத்தியுரை |
| புலமை நிறைதல் |
| 45. | அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற் செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும். |
எ-னின், இதுவும் அது. இ-ள்: தன் போலியரோடு பயிலும் வகையால் காற்கூறும் அக்கல்வியைத் தன் மாணாக்கர்க்கும் அவைக்களத்தோர்க்கும் உணர விரித்து உரைத்தலான் அரைக் கூறுமாகக் குற்றமற்ற புலமை நிரம்பும் எ-று. (45) |
| வழிபாடு |
| 46. | அழலி னீங்கா னணுகா னஞ்சி நிழலி னீங்கா னிறைந்த நெஞ்சமோ டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: இவ்வாறு ஒழுகுதல் வழிபாடாம் எ-று. (46) |
| சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் |
| 47. | ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. |
எ-னின், “பாயிரம் பொதுச்சிறப்பு” (நூ. 2) என மேல் நிறுத்த முறையானே, “மலர்தலை யுலகின்” (நன். சிற. பாயி. 1) என்றல் தொடக்கத்தனவாய் எல்லா நூற்கண்ணும் வரும் சிறப்புப் பாயிரங்களினது பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதனையும் பொதுப் பாயிரத்துள் கூறினார் பொது ஐந்தனுள் (3) நூன்முகத்தினது இலக்கணம் ஆதலின் என்க. இ-ள்: இவ்வெட்டுப் பொருளையும் விளங்க உணர்த்துவது சிறப்புப் பாயிரத்து இலக்கணமாம் எ-று. ‘ஆக்கியோன் பெயரே’ என்றல் தொடக்கத்தனவற்றுள் சிறப்பு என்பது தோன்றினமையின் பாயிரம் என வாளா கூறினார் என்க. (47) |