பக்கம் எண் : 14
  

பதிப்புரை
 

     “மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே.”

     “சினைவினை சினையொடு முதலொடுஞ் செறியும்.”

     “வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்
     மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும்.”

     “எப்பொருள் ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர்
     செப்பின ரப்படிச் செப்புதன் மரபே.”


என்னும் (நன். 91, 100, 127, 345, 371, 388) நூற்பாக்களை வாய் விட்டு உரக்கச்
சொல்லிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். இக்காரணங்களால் மனப்பாடக்
கல்விமுறையில் நன்னூல் விரைந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இடைக்காலத் தமிழின்
மொழியமைப்பை அறிவதற்கு இளையோரும் புலவரும் இவ்விலக்கணத்தைக் கற்கத்
தொடங்கினர். அதன் விளைவாகத் தொல்காப்பியப் பயிற்சி குறையத் தொடங்கியது.
பதினைந்தாம் நூற்றாண்டு முதல் சென்ற நூற்றாண்டு முடிய ஏறக்குறைய ஐந்நூறு
ஆண்டுகள் தொல்காப்பியத்தை விடவும் விரும்பிப் பயிலப்பட்ட இலக்கணம் நன்னூல்
என்பதை அறிஞர் உலகம் அறியும்.

     “அரும்பொரு ளைந்தையும் யாவரு முணர” என்று சிறப்புப் பாயிரப் பகுதி
குறிப்பதால் நன்னூலை ஐந்திலக்கண நூலாக மயிலைநாதர் (நன். 257, 418, 461), சங்கர
நமச்சிவாயர் (நன். சிற. பாயி.), சிவஞான முனிவர்11 முதலானோர் பலரும் கருதுகின்றனர்
“நன்னூல், சின்னூல் முதலிய நூல்கள் இரண்டனையே உணர்த்தும்.” (இல. கொ. 6 உரை) என்று சாமிநாத தேசிகர் கூறுவதும், ‘சிற்றதிகாரம்’ என்ற வழக்கும் இதற்கு
மாறான கருத்தைக் குறிக்கும். இவற்றில் உண்மை எது? வெற்றூகம் எது என்று முடிவு
காணப் போதிய சான்றுகள்12 இல்லை. எங்ஙனம் ஆயினும் நமக்குக் கிடைத்துள்ள
நன்னூலில் இப்போது இருப்பவை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டே;
இயல்கள் பத்து; நூற்பாக்கள்13 நானூற்று ஏழு. அவற்றோடு நூல் முகப்பில், பாயிரப்
பகுதியில் உள்ள ஐம்பத்தைந்து நூற்பாக்களையும் சேர்த்து நன்னூல் நூற்பாக்கள்
நானூற்று அறுபத்திரண்டு. அவற்றுள் நான்கு (நன். 9, 24, 25,

 _______________________
     11தருக்க சங்கிரகம் தருக்க சங்கிரக தீபிகை என்னும் உரையுடன்,
திருவாவடுதுறை, 1983. பக். 1.
     12சாமிநாதையர் (1918, பக்.  xiii) வேறு சில சான்றுகளையும்
குறிப்பிட்டுள்ளார்.
     13சாமிநாதையர் (1918. பக். 139, 312) காட்டியுள்ள பழைய வெண்பாக்கள்
இதனை உறுதிப்படுத்தும்.