| நன்னூல் விருத்தியுரை |
இ-ள்: தோன்றாத நுட்பங்களை எல்லாம் தோற்றிப், பல துறைப்பட்டு விரிந்த நூலைச் செய்து முடித்தான் ஆயினும் தன்னைத் தான் புகழ்தல் தகுதி அன்றாம். ஆதலின் நூல் செய்தானது புகழாகிய சிறப்புப் பாயிரத்தைப் பிறர் கூற வேண்டும் எ-று. (52) |
| தற்புகழ்ச்சி குற்றம் ஆகாத இடங்கள்
|
| 53. | மன்னுடை மன்றத் தோலைத் துக்கினுந் தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினுந் தன்னை மறுதலை பழித்த காலையுந் தன்னைப் புகழ்தலுந் தகும்புல* வோற்கே. |
எ-னின்45 தற்புகழ்ச்சியும் ஒரோவழிக் குற்றம் அன்று என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இவ்விடங்கள் ஆயின் தன்னைப் புகழ்தலும் தகுதியாம் புலவோற்கு எ-று. ‘புகழ்தலும்’ என்ற உம்மையான் இவ்விடங்களினும் தனனைப் புகழாமையே தகுதி என்பது பெற்றாம். (53) |
| பாயிரத்தின் இன்றியமையாமை |
| 54. | ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே. |
எ-னின், இருவகைப் பாயிரங்களும் (2) நூற்கு இன்றியமையாதன என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஆயிரம் உறுப்புகளான் விரிந்த நூல் ஆயினும் பாயிரம் இல்லாதது நூல் அன்று எ-று. (54) |
| பாயிரம் இல்லாமல் நூல் நிரம்பாமை |
| 55. | மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது. |
------------------------ 45“தகும்புல வோர்க்கே” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம். |