பக்கம் எண் : 146
  

நன்னூல் விருத்தியுரை
 

எழுத்திலக்கணத்தின் தொகை
 

57.

எண்பெயர் முறைப்பிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே.
 
     எ-னின், அவ்வெழுத்திலக்கணம் இத்துணைத்து என்பது உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இப் பன்னிரு பகுதியினையும் உடைத்து அவ்வெழுத்திலக்கணம் எ-று.

     ‘என்றா’ என்பது51 எண்ணிடைச்சொல் (428).

     இச்சூத்திரம் தொகுத்துச் சுட்டல் என்னும் உத்தி. மேல் வருவன எல்லாம்
வகுத்துக் காட்டல். (2)
 

எழுத்தும் அதன் வகையும்
 

58.

மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே.
 

     எ-னின், “பன் னிருபாற் றதுவே” (நூ. 57) என்றவற்றுள் எழுத்தினது
அகத்திலக்கணமாகிய பத்தையும் ஓர் இயலாகவும் அதன் புறத்திலக்கணமாகிய பதம்,
புணர்பு என்னும் இரண்டனுள் அவ்வெழுத்தான் ஆகும் பதத்தை ஓர் இயலாகவும்
அப்பதம் புணரும் புணர்ப்பை மூன்று இயலாகவும் ஓத்து முறை வைப்பு என்னும்
உத்தியான் வைக்கப் புகுந்து, முதற்கண் வைத்த எழுத்தியலின் எழுத்தினது எண்ணினை
நிறுத்த முறையான் (57) உணர்த்துவான் தொடங்கி, எழுத்து இன்னது என்பதூஉம்
அதன் வகையும் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: மொழிக்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது
எழுத்து. அது முதலெழுத்து என்றும் சார்பெழுத்து என்றும் இருவகையினை உடைத்து
எ-று.

     எனவே மொழிக்கு முதற்காரணம் எழுத்து ஆனாற்போல எழுத்திற்கு
முதற்காரணம் அணுத்திரள் என்பது பெற்றாம். ‘ஆம்’ என்னும் பெயரெச்சம், ‘ஒலி’
என்னும் பெயரோடு முடிந்தது.
----------------------------------
     51எண் முதல் போலி வரையில் உள்ள பத்தும் எழுத்தின்
அகத்திலக்கணம்; பதமும் புணர்ச்சியும் ஆகிய இரண்டும் அதன் றத்திலக்கணம் என்று சங்கர நமச்சிவாயர் (நன். 58) பாகுபடுத்துவார். என்றா என்னும்
இடைச்சொல்லால் அப்பாகுபாடு ஈண்டே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது என்று
இராமாநுச கவிராயர் (நன். 57) கூறுவார்.