பக்கம் எண் : 148
  

நன்னூல் விருத்தியுரை
 

      “தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
       தோன்றலிற் றோன்றாமை நன்று” (குறள். 236)

என அலகு பெறாதும் ஒருபுடை ஒத்து, அவற்றின் இடையே சார்ந்து வருதலானும்
ஏனைய தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்து ஆயின
எனக் கொள்க.

     அவ்வாறன்றி, உயிர்மெய் ஒழிந்தன அகரம் முதலியனபோல் தனித்தானும் ககரம்
முதலியனபோல அகரமொடு சிவணியானும் இயங்கும் இயல்பின்றி, ஒரு மொழியைச
 சார்ந்து வருதலே தமக்கு இலக்கணமாக உடைமையின் சார்பெழுத்து ஆயின53 எனக்
கோடலும் ஆம் என்க.

     இனி ஆசிரியர் தொல்காப்பியர் செய்கை ஒன்றனையும் நோக்கிச் சார்பெழுத்து
மூன்று எனக் கருவி செய்தார் ஆகலின் இவ்வாசிரியர் செய்கையும் செய்யுளியலும்
நோக்கிச் சார்பெழுத்துப் பத்து எனக் கருவி செய்தார்54 என்பதும் உய்த்துணர்க. (5)
 

சார்பெழுத்தின் வகை
 

61.

உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஒளகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு; குறுகாத ஆய்தம் எட்டு; உயிரளபெடை
இருபத்தொன்று; ஒற்றளபெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம் முப்பத்தேழு;
குற்றியலுகரம் முப்பத்தாறு; ஐகாரக் குறுக்கம் மூன்று; ஒளகாரக் குறுக்கம் ஒன்று; மகரக்
குறுக்கம் மூன்று; ஆய்தக் குறுக்கம் இரண்டுடனே சார்பெழுத்தினது மிகுந்த விரி
முந்நூற்று அறுபத்தொன்பதாம் என்று சொல்லுவர் புலவர் எ-று.
--------------------------
     53“தாமே தமித்து நிற்கையின் முதலெழுத்து என்று ஆயின. அவையே
தம்மொடு தாம் சார்ந்தும் இடம் சார்ந்தும் இடமும் பற்றுக்கோடும் சார்ந்தும்
விகாரத்தால் வருதலிற் சார்பெழுத்து என்று ஆயின.” என மயிலைநாதர் (நன்.
60) விளக்குவார்.
     54தொல்காப்பியர் சார்பெழுத்தை மூன்றாகவும் பவணந்தி முனிவர்
பத்தாகவும் கொள்வதற்கு மயிலைநாதர் (நன். 59) கூறும் காரணங்களும் அறியத்
தக்கன.