| நன்னூல் விருத்தியுரை | இவை இத்துணைய ஆதல் (89-97) பிறப்பதிகாரத்தினுள் (74-97) காண்க. இவ்வாறு உயிர்மெய் ஒழிந்தனவற்றையும் விரித்தல்55 தொன்னெறி என்பார், ‘என்ப’ என்றார். (6) | | பெயரின் பொது இலக்கணம் | | 62. | இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின. | எ-னின், நிறுத்த முறையானே (57) எழுத்தின் பெயர் ஆமாறு உணர்த்துவான் தொடங்கிப், பெயர்க்கு எல்லாம் பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இடுகுறிப்பெயரும் காரணப்பெயரும் ஆகிய இரண்டும் பல பொருட்குப் பொதுப்பெயராயும் ஒரு பொருட்குச் சிறப்புப்பெயராயும் வருவனவாம் எ-று. ஒரு பொருளைக் குறித்தற்குக் கடவுளானும் அறிவுடையோரானும் இட்ட குறியாகிய பெயர் இடுகுறிப்பெயர். காரணத்தான் வரும் பெயர் காரணப்பெயர். உ-ம்: மரம் என்பது இடுகுறிப் பொதுப்பெயர். பனை என்பது இடுகுறிச் சிறப்புப்பெயர். அணி என்பது காரணப் பொதுப்பெயர். முடி என்பது காரணச் சிறப்புப்பெயர். இனி இரட்டுற மொழிதல் என்னும் உத்தியான் இச்சூத்திரத்திற்கு இடுகுறி என்றும் காரணம் என்றும் சொல்லப்படும் இலக்கணங்களை உடைய பெயர்கள் இடுகுறி, காரணம் என்னும் இரண்டற்கும் பொதுவாயும் இடுகுறிக்கே சிறப்பாயும் காரணத்திற்கே சிறப்பாயும் வருவனவாம் என்றும் பொருள் உரைத்துக்கொள்க. உ-ம்: பரம் என்பது இடுகுறிப்பெயர். பரமன் என்பது காரணப்பெயர். முக்கணன், அந்தணன், மறவன், முள்ளி, கறங்கு, மொழி, சொல் என்பன காரண இடுகுறிப்பெயர். இவை காரண இடுகுறி ஆயது என்னை எனின் இவற்றுள் முக்கணன் என்னும் பெயர் யானைமுகக் கடவுள் முதலியோர்க்கும் மூன்று கண் உள ஆகலின் காரணம் கருதிய வழி மூன்று கண்ணினை உடையோர் பலர்க்கும் சேறலானும் காரணம் கருதாத வழி இடுகுறி மாத்திரையேயாய்ப் பரமனுக்கே சேறலானும் காரண இடுகுறி ஆயிற்று. ஏனைப் பெயர்கட்கும் இவ்வாறே காண்க. இவ்வாறே வடநூலார் இடுகுறியை ரூடி என்றும் காரணத்தை யோகம் என்றும் காரண இடுகுறியை யோகரூடி என்றும் வழங்குப. இவ்விலக்கணத்தான் எழுத்தினது பெயரும் பிற பெயரும் வருமாறு காண்க. (7) ----------------------------- 55எழுத்தைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் வழங்கும் முறையை மயிலைநாதர் (நன். 60) எடுத்துக்காட்டுவார். | |
|
|