பக்கம் எண் : 15
  

பதிப்புரை
 

55) வெண்பாக்கள்; எஞ்சிய எல்லாம் நூற்பா அகவலில் அமைந்தவை. வெண்பா யாப்பில்
அமைந்துள்ள நான்கும் பாயிரப் பகுதியிலேயே இருப்பதும் அவற்றுள் ஒன்றை (நன். 9)
மயிலைநாதர் மேற்கோளாகக் கொள்வதும் கருதத் தக்கன.

     பாயிரத்தோடு தொடர்புடைய வேறு சில செய்திகளையும் இங்கே குறிப்பிட
வேண்டும். நன்னூலுக்குச் சிறப்புப் பாயிரம் யாரால், எப்போது இயற்றப்பட்டது என்று
உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனினும் மயிலைநாதர் இதற்குக் கவிதை நடையில்
பதவுரை எழுதியுள்ளதால் அவர் காலத்துக்கு முன்பே இது பயிற்சிக்கு வந்திருக்க
வேண்டும். அதனால் பவணந்தியோடு பயின்றவரோ அல்லது அவருடைய மாணாக்கருள்
ஒருவரோ நன்னூல் தோன்றிய நூற்றாண்டிலேயே இப்பாயிரத்தை எழுதியிருக்கலாம்
என்று தோன்றுகிறது. தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தைத் தழுவியதாகத்
தோன்றினாலும் நன்னூல் சிறப்புப் பாயிரம் அதை விட விரிவானது; நடையழகு மிக்கது.
வரலாற்றுச் செய்திகளை வழங்குவது இதன் மற்றொரு சிறப்பு.

     பொதுப் பாயிரப் பகுதியில் பவணந்தி முனிவர் இயற்றிய நூற்பாக்கள் எவை?
பழைய உரைகளிலிருந்து அவர் எடுத்துத் தொகுத்தவை எவை என்று உறுதியாகக் கூற
முடியவில்லை; கூறவும் முடியாது. “எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம்
உரைத்து உரைக்க என்பது மரபு.”
(தொல். சிற. பாயி.) என்ற இளம்பூரணர் உரையும்
உரைத் தோற்றுவாயில் உரையாசிரியர்கள் காட்டிய14 மேற்கோள் சூத்திரங்களும்
பவணந்தி முனிவரை ஈர்த்திருக்க வேண்டும். அதனால் தமிழிலக்கண உரைகளில்
உதிரிகளாகச் சிதறிக் கிடந்த பாயிரத் தொடர்பான நூற்பாக்களோடு ஆசிரிய
வசனங்களாகச் சில தொல்காப்பிய நூற்பாக்களையும் (தொல். செய். 163, 164; மரபு. 96)
இணைத்து, ஒரு பதிப்பாசிரியரைப் போல அவற்றை நிரல்படத் தொகுத்துப் பாயிரப்
பகுதியை உருவாக்கியது பவணந்தி முனிவருடைய பங்களிப்பு. பொருள் தொடர்பு கருதி
இடை இடையே அவரும் சில நூற்பாக்களை எழுதிச் சேர்த்திருக்க வேண்டும். அவையே
நூல் முகப்பில் பாயிரவியலாக அமைந்துவிட்டன. ஒவ்வொரு அதிகாரத்தின்
துவக்கத்திலும் பவணந்தி முனிவர் இறைவணக்கம் (நன். 56, 258) கூறியுள்ளார். ஆனால்
பாயிரப் பகுதியில் அவர் அவ்வாறு கூறவில்லை. “ஆகவே பாயிரம் இவர்
செய்யவில்லை என்பது கருத்து; முழுமையும் தானெடுத்து மொழிதலாக
அமைந்ததே ஆகும்.”
என்று15 சொல்லப்படுவதும் உண்டு.
 ______________________________ 
     14சாமிநாதையர், 1918. பக்.  xiv.
     15மு. அருணாச்சலம், 1970. பக். 166.  எஸ். கலியாண சுந்தரையர்
(நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், சென்னை, 1946. பக்.  iv)  
இக்கருத்தை முன்பே குறிப்பிட்டுள்ளார்.