பக்கம் எண் : 155
  

நன்னூல் விருத்தியுரை
 

என்றும், ‘மெய்பெற’ (தொல். மொழி. 23) என்ற இலேசானே ஒள என்னும்
நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர உகரங்களே அன்றி அவற்றிடையே
வகரமும் ஒத்து இசைக்கும் என்றும் இம்பர், உம்பர் என்றாற் போல்வன
காலவகை இடவகைகளான் மயங்கும் ஆகலின் இவற்றின் முதற்கண் நிற்பது
யாதோ இறுதிக்கண் நிற்பது யாதோ என்னும் ஐயம் நீக்குதற்கு, “இகரமும் யகரமு
மிறுதி விரவும்”
(தொல். மொழி. 25*) என்றும் கூறினார். மொழிந்த பொருளோடு
ஒன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்றி முடித்தல் என்னும் உத்தியான்
எகர ஏகாரங்கள், ஒகர ஓகாரங்கள் அவ்வாறு ஆதலும் கொள்ள வைத்தார்.
மாபாடியத்துள் ஊகாரத்தின் பின் நின்ற வடவெழுத்து நான்கு உயிர்க்கும்
இடையே ரகர லகரக்கூறுகள் ஒத்து நிற்கும் என்ற ஆசிரியர் பதஞ்சலியார்க்கு65
ஐ, ஒள என்புழியும் இடையே யகர வகரக்கூறுகள் விரவி நிற்கும் என்பது
உடன்பாடு ஆதல் பெற்றாம். எகரம் முதலியவற்றுள் அகரக்கூறு குறைவும் இகர
உகரக்கூறுகள் மிகுதியும் ஆம் எனவும் உணர்க. இதுவும் மாபாடியத்தில்
கண்டது. > <ஈண்டுக்66 கூறியவற்றானே அகரம் உயிரெழுத்துக்களினும் கலந்து
நிற்குமாறு அறிக. >
 

     இனி மெய்களுள் <வலியாரை67 முன் வைத்து மெலியாரைப் பின் வைத்தல்
மரபு ஆகலின் அச்சிறப்பு நோக்கி, வல்லெழுத்துக்கள் முன்னும் அவ்வவற்றிற்கு
இனம் ஒத்த மெல்லெழுத்துக்கள் அவ்வவற்றின் பின்னுமாக வைக்கப்பட்டன.
அவ்விரண்டும் நோக்கியல்லது இடை நிகரனவாய் ஒலித்தல் அறியப்படாமையின்
அதுபற்றி இடையெழுத்துக்கள் அவ்விரு கூற்றிற்கும் பின் வைக்கப்பட்டன. >  

     <ஒருவாற்றான்68 ஒத்தலும் ஒருவாற்றான் வேறாதலும் உடைமைபற்றி
அன்றே இனம் என்று வழங்கப்படுவது. அவற்றுள் இடையெழுத்து ஆறும்
இடப்பிறப்பான் ஒத்தலும் முயற்சிப்பிறப்பான் வேறாதலும் உடைமையின்
இடைக்கணம் என ஓர் இனம் ஆயின. உயிர்க்கணம், வன்கணம், மென்கணம்
என்பவற்றிற்கும் இஃது ஒக்கும். > 

---------------------------------------
     65கி. மு. முதல் நூற்றாண்டினராகக் கருதப்படும் இவ்வாசிரியர்
பாணினீயத்துக்கு மாபாடியம் என்னும் பேருரை வரைந்தார் என்பர்.
     66தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 47). இப்பகுதி ஆறுமுக
நாவலரின் முதல் பதிப்பில் (1851. பக். 34) வேறு வகையாகக் காணப்படுகிறது.
     67தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 42).
     68தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 40-41).