பக்கம் எண் : 156
  

நன்னூல் விருத்தியுரை
 

     <இனிக் க ஙக்களும்69 ச ஞக்களும் ட ணக்களும் த நக்களும் ப மக்களும்
அடிநாவண்ணம், இடைநாவண்ணம், நுனிநாவண்ணம், அண்பல் அடி, இதழ்
என்னும் இவற்றின் முயற்சியால் பிறத்தலான் அப்பிறப்பிடத்து முறையே
முறையாக வைக்கப்பட்டன. > < ய ர ல வக்கள்70 நான்கும் முறையே
அடியண்ணமும் இடையண்ணமும் அண்பல் முதலும் இதழும் என்னும் இவற்றின்
முயற்சியால் பிறத்தலான் அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.
ழகார றகார னகாரங்கள் மூன்றும் தமிழெழுத்து என்பது அறிவித்ததற்கு
இறுதிக்கண் வைக்கப்பட்டன. அவற்றுள்ளும் ழகாரம் இடையெழுத்து ஆகலின்
அதுபற்றி இடையெழுத்தோடு சார்த்தி அவற்று இறுதிக்கண் வைக்கப்பட்டது.
வடமொழியின் லகரம் ளகரமாகவும் உச்சரிக்கப்படுவதன்றித் தனியே ஓர் எழுத்து
அன்மையின் அச்சிறப்பின்மைபற்றி இடையெழுத்தாகிய ளகரம் ழகரத்திற்கும்
பின் வைக்கப்பட்டது. > 


     இவ்வாறே உயிருள்ளும்  <எகர ஒகரங்கள்71 ஒருவாற்றான் சிறப்பெழுத்து
ஆயினும் பிராகிருதமொழியில் பயின்று வருதலானும் சாமவேதம் உடையாருள்
ஒருசாரார் இசைபற்றிக் குழூஉக்குறிபோலக் கொண்டு ஓதுப ஆகலானும்
இறுதிக்கண் வையாது, முறைபற்றி ஏகார ஓகாரங்களின் முன் வைக்கப்பட்டன. > 
ஆகையால் முறை ஆமாறு72 இவை என உய்த்துணர்ந்து கொள்க.


     <இவ்வாறு73 உலகத்தும் பிறப்பு ஒத்தல்பற்றியே இனம் என்று வழங்குப
ஆகலின்> ஈண்டு, ‘இனத்தினும்’ என்றதற்குப் பிற காரணங்களும் உளவேனும்
பெரும்பான்மையும் பிறப்பு ஒத்தலே இனம் என்று கொள்க. (18)
 

எழுத்துக்களின் பிறப்புக்குப் பொதுவிதி
 

{74}

 நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
 எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
 மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
 வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே.
  
 -------------------------------------------------.
     69தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 42).
     70தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக்.40).
     71தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 47).
     72எழுத்துகளின் கிடக்கைமுறைக்கு மயிலைநாதர் (நன். 72),
நச்சினார்க்கினியர் தொல். நூன். 1, 8, 21; மொழி, 13), வைத்தியநாத தேசிகர்
(இல. விள. 8) முதலியோர் கூறும் காரணங்களையும் ஒப்பிடுக.
     73தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 41).