பக்கம் எண் : 160
  

நன்னூல் விருத்தியுரை
 

     எ-னின், மேற் கூறிய (74-87) பிறப்பிற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: பல எழுத்திற்குப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட்டனவேனும் எடுத்தல்,
படுத்தல், நலிதல்75 என்னும் எழுத்திற்கு உரிய ஒலிமுயற்சியான் ஒன்றற்கு ஒன்று பிறப்பு
வேறுபாடுகளும் அவ்வவற்றின்கண் சிறிது சிறிது உளவாம் எ-று. (33)
 

        உயிர்மெய்
 

{89}

புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை யுயிரோ டுருவு திரிந்தும்
உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற்
பெயரொடு மொற்றுமுன் னாய்வரு முயிர்மெய்.

     எ-னின், மேல் (87) பிறப்பு உணர்த்திய சார்பெழுத்திற்குச் சார்ந்து வருமாறும் ஓர்
பிறப்பு ஆதலின் பிறப்பதிகாரத்துள் (74-97) அடக்கி உணர்த்துவான் தொடங்கி,
அவற்றுள் உயிர்மெய் வருமாறு உணர்த்துதல்76 நுதலிற்று.

     இ-ள்: மெய் புள்ளியை விட்டு அகரத்தோடு கூடியவழி விட்ட உருவே
உருவாகியும் ஒழிந்த உயிர்களோடு கூடியவழி உருவு வேறுபட்டும் தன் மாத்திரை
தோன்றாது, உயிர்மாத்திரையே மாத்திரையாய், அதன்77 வரிவடிவினது விகாரவடிவே
வடிவாய், உயிர்வடிவை ஒழித்து மெய், உயிர் என்னும் பெயராகிய இரண்டு இடத்தும்
பிறந்த உயிர்மெய் என்னும் பெயருடனே ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாகி
வரும் உயிர்மெய் எழுத்து எ-று. 

     <உருவு திரிதல்78 புள்ளி பெறுவன புள்ளி பெற்றும் மேலும் கீழும்
விலங்கு பெறுவன விலங்கு பெற்றும் கோடு பெறுவன கோடு பெற்றும் புள்ளியும்
கோடும் உடன் பெறுவன உடன் பெற்றும் வருவனவாம். அருகே பெற்ற
புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதுவர். > 


     ‘ஒழித்து’ என்றும், ‘ஒற்றுமுன் னாய்’ என்றும் வந்த சினைவினைகள், ‘இருவயிற்
பெயரொடும்... வரும்’ என்னும் முதல்வினையோடு முடிந்தன.
----------------------------
     75இவற்றோடு உரப்பலைக் கூட்டி நான்கு என்றும் (வீர. 4) விலங்கலைக்
கூட்டி நான்கு என்றும் (தொல். பிற. 6 நச்.; இல. விள. 14; இல. கொ. 127)
கூறப்படும்.
     76இந்நூற்பாவின் உரைக்குச் சிவஞான முனிவர் செய்த திருத்தம் ஆறுமுக
நாவலர் பதிப்புகளில் இடம் மாறியுள்ளது.
     77“மாத்திரையாய்த் தன் வரிவடிவினது” என்பது ஆறுமுக நாவலர் பாடம்.
     78இளம்பூரணர், நச்சினார்க்கினியர் (தொல். நூன். 17) உரை.