எ-னின்79 முற்றாய்தம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: புள்ளி வடிவினதாய ஆய்தம் குற்றெழுத்தின் முன்னதாய், உயிரோடு கூடிய வல்லெழுத்து ஆறன் மேலதாய் வரும் எ-று. உயிர்வருக்கத்து இறுதிக்கண் தந்த ஆய்தவடிவைப் பிற்காலத்து வேறுபட வரைந்து வழங்குவர் ஆதலின் தொல்லை வடிவு80 தோன்ற, ‘ஆய்தப் புள்ளி’ என்றார். உ-ம்: எஃகு, கஃசு, இருபஃது, அஃகடிய, அஃகான், மஃகான் எனவும் தனிக்குறில் என்று வரைந்து ஓதாமையின், “விலஃகி வீங்கிரு ளோட்டுமே மாதர் இலஃகு முத்தி னினம்” (நன். 89 மயிலை.) எனவும் வரும். பிறவும் அன்ன. இச்சூத்திரம் மேற்கோள் (தொல். மொழி. 5.) ஆதலால் தான் எடுத்து மொழிதல் என்னும் உத்தி. வல்லின வகையான் இயல்பாக வந்த ஆய்தம் ஆறனோடு புணர்ச்சி விகாரத்தான் வரும் ஆய்தமும் (235) செய்யுள் விகாரத்தான் வரும் ஆய்தமும்81 கூடி எட்டாய் வருமாறு காண்க. (35) -------------------------- 79இது தொல்காப்பிய (மொழி. 5) நூற்பா. 80இளம்பூரணரைத் தழுவி, ‘ஆய்தப் புள்ளி’ என்பதனை மயிலைநாதர் (நன். 89) இருபெயரொட்டாகக் கொண்டு விளக்குவார். 81அஃகான், மஃகான், செய்வஃது போல்வன செய்யுள் விகாரத்தால் வரும் ஆய்தம். |