| நன்னூல் விருத்தியுரை | | உயிரளபெடை | | {91} | இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில் அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே. | எ-னின், உயிரளபெடை வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: செய்யுட்கண் இசை குன்றின் மொழி முதலினும் இடையினும் கடையினும் நின்ற நெட்டெழுத்து ஏழும் அவ் இசை நிறைக்கத் தத்தம் மாத்திரையின் மி்க்கு ஒலிக்கும். அவ்வாறு அளபெடுத்தன அறிதற்கு, அவற்றின் பின் அவற்றிற்கு இனமாகிய குற்றெழுத்துக்கள் வரிவடிவின்கண் அறிகுறியாய் வரும் எ-று. உ-ம்: “ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோ டீஇ ரிரையுங்கொண் டீரளைப் பள்ளியுட் டூஉந் திரையலைப்பத் துஞ்சா திறைவன்றோள் மேஎ வலைப்பட்ட நம்போ னறுநுதால் ஓஒ வுழக்குந் துயர்” (யா. வி. 41) எனவும், “உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு” (குறள். 1200) எனவும், “அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு நல்ல படாஅ பறை” (குறள். 1115) எனவும் வரும். “செறாஅஅய் வாழிய” (குறள். 1200) என்புழி நான்கு மாத்திரையாயும் ஏனைய மூன்று மாத்திரையாயும் அலகு பெற்றுச், செய்யுளிசை நிறைத்து மூவிடத்தும் வந்தவாறு காண்க. பிறவும் அன்ன. இனி, ‘இசைகெடின்’ என்று பொதுப்படக் கூறினமையால், | | | “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை” (குறள். 15) | |
|
|