பக்கம் எண் : 163
  

நன்னூல் விருத்தியுரை
 

எனக் குறில் நெடிலாய் அளபெழுந்து, அலகு பெற்றும் பெறாதும் இன்னிசை நிறைப்ப
வருவனவும்,

     “உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
     வரனசைஇ யின்னு முளேன்” (குறள். 1263)

என அளபெழுந்து, அலகு பெற்றும் பெறாதும் சொல்லிசை நிறைப்ப வருவனவும்,

     “வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
     வீழப் படாஅ ரெனின்” (குறள். 1194)

என்பதனுள், “கெழீஇயிலர்” (குறள். 1194) என அளபெழுந்து, அலகு பெறாது சொல்லிசை
நிறைப்ப வருவனவும் கொள்க.

     எழுத்துப் பல ஆயின ஒலிவேற்றுமையான் அன்றே? அங்ஙனம் ஆதலின்
நெடிலது விகாரமாய் ஓர் ஒலியாய்ப் பிறப்பதே அளபெடை என்பார், ‘நெடில் அளபெழும்’ என்றும், ‘அவற்றவற் றினக்குறில் குறியே’ என்றும்82 கூறினார். ஆசிரியர் தொல்காப்பியரும் நீரும் நீரும் சேர்ந்தாற்போல நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டு இசைப்பதே அளபெடை என்பார்,
 

    “குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே (தொல். மொழி. 8)
 
என்றார். இங்ஙனம் ஒலிபற்றிக் கூறும் வகையால் இருவர்க்கும் கருத்து ஒன்றே ஆயினும், ‘குறியே’ என்றது இவ்விரண்டு மேற்கோளில் ஒன்று துணிதலான் ஒருதலை
துணிதல் என்னும் உத்தியும் அம்மதமும் பட வந்தது என்க.

      <இப்பெற்றி83 அறியாதார் நெடிலும் குறிலும் விரலும் விரலும் சேர
நின்றாற்போல இணைந்து நின்று அளபெடுக்கும் எனத் தமக்கு வேண்டியவாறே84
கூறுப. நெடிலும் குறிலும் அவ்வாறு நின்று அளபெடுக்கும் என்றல்
பொருந்தாமைக்கு எழுத்தெடை என்னாது அளபெடை என்னும் குறியீடே சான்று
ஆதல் அறிக. அற்றேல் ஓர் எழுத்தினையே இரண்டு மாத்திரையும் ஒரு
மாத்திரையுமாகப் பிரித்து அசைத்து, அதனாற் சீர்செய்து தளையறுத்தல்
பொருந்தாது எனின்85 அற்று அன்று. எழுத்து வகையான் என்னாது,
----------------------------
     82தொல்காப்பியச் சூத்திர விருத்தியோடு (பக். 43) ஒப்பிடுக.
     83தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 43-44).
     84இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் (தொல். நூன். 6) இவ்வாறு
கூறுவர்.
     85இவ்வாறு சீர்செய்து தளையறுத்தல் பொருந்தாது என்பது வைத்தியநாத தேசிகர் (இல. விள. 19) கருத்து.