பக்கம் எண் : 164
  

நன்னூல் விருத்தியுரை
 

    “மாத்திரை வகையாற் றளைதம கெடாநிலை
யாப்பழி யாமையென் றளபெடை வேண்டும் (யா. வி. 2*)


எனக் கூறுப ஆகலின் எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும் சீர்
செய்தலும் தளையறுத்தலும் ஓசைபற்றியல்லது எழுத்துப்பற்றி அல்ல என்க. > 


     இதனுள் செப்பலோசை முதலிய ஓசை குன்றாது நெட்டெழுத்து ஏழும் மொழி
முதல் இடை கடைகளின் நின்று அளபெடுக்குங்கால் ஒளகாரம் மொழி இடை
கடைகளின் வரப்பெறாமையின் அவ்விடங்களின் அஃது ஒழிய நின்று
அளபெடுக்கும் அளபெடை பத்தொன்பதோடு இன்னிசை நிறைப்பவும் சொல்லிசை
நிறைப்பவும் அளபெடுக்கும் அளபெடை இரண்டும் கூடி,
உயிரளபெடை எழுமூன்றாய் வருமாறு காண்க. (36)
 

ஒற்றளபெடை
 

92. 

ஙஞண நமன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே.
 
     எ-னின், ஒற்றளபெடை வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: செய்யுட்கண் இசை குன்றின் குறிலிணைக்கீழும் குறிற்கீழுமாய் மொழி
இடையினும் ஈற்றினும் நின்ற இப்பத்து ஒற்றும் ஆய்தமும் அவ்வோசை நிறைக்கத் தம்
மாத்திரையின் மிக்கு ஒலிக்கும். இவ்வாறு அளபெடுத்தன அறிதற்கு, அவற்றின் பின்
அவ்வெழுத்துக்களே வரிவடிவின்கண் வேறு அறிகுறியாய் வரும் எ-று.

     “ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே” (நூ. 358) என்பதனான் மேல்,
“இசைகெடின்” (நூ. 91) என்பதனை இவ்வளபெடைக்கும் வருவித்துக்கொள்க. மாத்திரை
நிறைத்தற்கு அன்றி அறிகுறி மாத்திரையாய் வரும் என்று கோடற்கு, ‘வேறே’ என்றார்.