| “எங்ங் கிறைவனுள னென்பாய் மனனேயான் எங்ங் கெனத்திரிவா ரின்” (வி. மே.) எனவும், “கலங்ங்கொண்ட கவின்மார்பர்” (நன். 91* மயிலை.) “மடங்ங் கலந்த மனனே களத்து விடங்ங் கலந்தானை வேண்டு” (வி. மே.) எனவும், “அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்புசெய்து நங்ங் களங்கறுப்பா நாம்” (வி. மே.) எனவும் ஙகரம் குறிலிணைக்கீழும் குறிற்கீழும் மொழிக்கு இடையினும் கடையினும் முறையே அளபெழுந்தது. “கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ மின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு” (யா. வி. 3*) என ணகரமும் னகரமும் குறிற்கீழ் மொழியீற்றின் அளபெழுந்தன. “எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர் வெஃஃகு வார்க்கில்லை வீடு” (யா. வி. 3) என ஆய்தம் குறிற்கீழ் மொழிக்கு இடையின் அளபெழுந்தது. பிறவும் அன்ன. ஆய்தம் ஒற்றொடும் ஒருபுடை ஒத்து வருதலின் ஈண்டுத் தந்துரைத்தார். ஙகரம் விதியீறாய் வருதலின் அதனை விலக்காது. ஆய்தம் ஒருமொழிக்கண்ணும் தொடர்மொழிக்கண்ணும் விதித்த முதலெழுத்துக்கள் இருமருங்கும் நின்று எழுப்ப, இருசிறகு எழுப்ப எழும் உடல் அதுபோல் இடை எழுந்து ஒலிப்பதன்றி, ஒருவாற்றானும் ஈறாய் வரும் தன்மையது அன்று ஆகலின் அஃகடிய முதலியவற்றின்கண் திரிந்த ஆய்தம் அஃகான் முதலியவற்றின்கண் தோன்றிய ஆய்தம்போலத் தொடர்மொழிக்கண் இடைநிலை ஆயதன்றி, விதியீறு அன்று என்று அதன் உண்மை துணிந்து, அதனை இறுதிக்கண் விலக்கி, ஒற்றளபெடை நாற்பத்திரண்டு என்று மேல் (61) உரைத்தவாறு இங்ஙனம் வருதல் காண்க. (37) |