பக்கம் எண் : 167
  

நன்னூல் விருத்தியுரை
 

மாத்திரையின் அமையாது, பிற எழுத்துக்களுள் ஒன்றும் பலவும் மேலே தொடரவும்
பெறும் எ-று.

     நெடிலை ஒடுக் கொடுத்துப் பிரித்தார் தனிநெடில் ஆதலின். ‘உயிர்’ என்றது
குற்றுயிர், நெட்டுயிர் இரண்டினையும். ‘தொடர்’ என்னும் வினைத்தொகை, ‘வன்மையூ
ருகரம்’ என்னும் செயப்படுபொருளோடு முடிந்தது.

     ‘பிற’ என்றது, “பகாப்பத மேழும் பகுபத மொன்பதும்” (நூ. 130) என்று
வரையறுத்தவற்றின் இங்ஙனம் ஈற்றயலும் ஈறுமாகக் கூறிய இரண்டும் ஒழித்து, ஒழிந்த
ஏழும் ஐந்தும் ஆய எழுத்துக்களை. ‘தொடரவும்’ என்ற உம்மை இறந்தது தழீஇ
நின்றது. ‘பெறுமே’ என்றது தனிநெடில் ஒழிந்த ஐந்து தொடரும் வன்மை ஊர் உகரம்
குறுகுதற்கும் மொழி நிரம்புதற்கும் மேல் தொடர்தலும் இன்றியமையாமையின்.

     உ-ம்: நாகு, எஃகு, வரகு, பலாசு, கொக்கு, குரங்கு, அல்கு என வரும். பிறவும்
அன்ன.

     இனி இங்ஙனம், ‘பிறமேற் றொடரவும் பெறுமே’ எனக் கூறாது ஒழியின் இவ் ஐவகை எழுத்தும் ஈற்றெழுத்தும் கூடியே ஒரு மொழியாய் நிற்கும் எனவும் பட்டு அது, இது என்றல் தொடக்கத்தனவும் குற்றியலுகரம் ஆவான் செல்லும் எனவும் ஆய்தமும் தனிமெய்யும் மொழிக்கு முதலாம் எனவும் தனிநெடிலை ஒடுக் கொடுத்து விதக்க வேண்டா எனவும் ஆசிரியர் தொல்காப்பியர்,

     ‘நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும்
     குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” (தொல். மொழி. 3)

எனத் தொகுத்துக் கூறியவாறே கூறாது, எல்லா எழுத்தையும் கூறுவார் அவற்றையே
ஆய்தம் முதல் ஐந்தாக வகுத்துத், தனிநெடிலோடு ஆறாகக் குற்றுகரத்தை
அறுவகையான் வழங்குதற்கு இலக்கணம் தோன்றக் கூறினமையின் அவ்வாறு
எடுத்தாளுதற்பொருட்டு எல்லா எழுத்தையும் குறியீடாக விதந்த ஆய்தம் முதலிய
ஐந்தனுள் ஒன்று ஈற்றயலின் நின்று, இறுதி வன்மை ஊர் உகரத்தைத்
தொடர்தலே அன்றிப் பிற மேல் தொடர்தலும் குறுகுதற்கு ஏது அன்று எனவும்
பொருள்படுமாறு அறிக.


     இச்சூத்திரப் பொருள் முன் மொழிந்து கோடல் என்னும் உத்தி.

     இனி இவ்வாறன் பகுதித் தொடரும் இடம் ஆதலின் இவ்
இடவேற்றுமையால் குற்றியலுகரம் முப்பத்தாறு என்று மேற் கூறியவாறே (61)
வருமாறு காண்க.