| நன்னூல் விருத்தியுரை | இவ்வாறு <கொள்ளாது,87 ஆசிரியர் ஈற்றயலில் நின்ற எழுத்தை இடமாகக் கொண்டாற்போல ஈற்றயலில் நின்ற அசையை இடமாகக் கொண்டு அவற்றுள் அது, இது முதலிய முற்றுகரத்தை நீக்குதற்குக் குற்றெழுத்துத் தனியே வரும் அசை ஒன்றனையும் ஒழித்து, ஏனை ஏழு அசையினையும், “நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென் றேழ்குற் றுகரக் கிடனென மொழிப” (யா. வி. 2) எனக் கூறினாரும் உளராலோ எனின் அவ்வாறு88 ஏழ் இடம் எனக் கோடும் என்பார்க்குப் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, பட்டாங்கு, விளையாட்டு, இறும்பூது முதலியனவும் ஆய்தம் தொடர்ந்தனவும் நெட்டொற்றிறுதி, நெடிலிறுதிக்குற்றுகரம் முதலியனவும் குற்றொற்றிறுதிக் குற்றுகரமுமாய் அடங்குமேனும் போவது, வருவது, ஒன்பது முதலியன அடங்காமை அறிக. நெடில் முதலாயின ஈற்றயலில் நிற்றல் வேண்டும் என யாப்புறவு இன்மையின் முதற்கண் நிற்பினும் ஈற்று உகரம் அவற்று இறுதியாதல் அமையும் எனக் கொண்டு, போவது முதலியனவும் நெடிலிறுதி முதலியனவாய் அடங்கும் என்பார்க்கும் அங்ஙனம் பாகுபடுத்துக் கருவி செய்ததனால் போந்த பயன்89 இன்று என்பதாம்.> இது பிறர் நூல் குற்றம் காட்டல் என்னும் மதம். இனி மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல் என்னும் உத்தியான் நுந்தை என்னும், “முறைப்பெயர் மருங்கி, னொற்றிய நகரமிசை” (தொல். மொழி. 34) உகரம் ஊர்ந்து மொழிமுதற்கண் நிற்பினும் குற்றியலுகரம் ஆம் எனவும் அவ்வுகரம் செக்குக்கணை, சுக்குக் கொடு எனப் புணர்மொழி இடைப்படினும் தன் அரை மாத்திரையில் குறுகும் எனவும் கொள்க. (39) | | ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் | | {95} | தற்சுட்* டளபொழி யைம்மூ வழியும் நையு மௌவு முதலற் றாகும். | ----------------------------- 87தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 53-54). 88மயிலைநாதர் உரையோடு (நூ. 93) ஒப்பிடுக. 89“போதப் பயன்”, “போதப் பயின்று” என்பன பிற விருத்தியுரைப் பதிப்புகளில் உள்ள பிழைப் பாடங்கள். | |
|
|