பக்கம் எண் : 17
  

பதிப்புரை
 

குழப்பநூல் நெறி. அதுபோல ஆசிரிய வசனங்களைப் போற்றுதல் அளவோடு
அமைந்தால் நூல்நெறி; அளவை மீறினால் நகல்நூல் நெறி.

     நன்னூலைப் பொறுத்த வரையில் மூலபாடம், நூற்பாக்களின் அடியளவு, அவற்றின்
தொகை, வைப்புமுறை, இயல்களின் வரிசைமுறை ஆகியவற்றில் நிகழ்ந்துள்ள
வேறுபாடுகள் குறைவு; நன்னூலின் பயிற்சியை நோக்க மிக மிகக் குறைவு. ஆயினும்
சென்ற நூற்றாண்டில் நன்னூலுக்கு விருத்தியுரை எழுதிய இராமாநுச கவிராயர்
இயல்களின் வைப்புமுறையில் செய்த ஒரு மாற்றத்தை மட்டும் குறிப்பிட வேண்டும்.
பொதுவியல் சொல்லதிகாரத்தின் இறுதி இயலாக இருக்க வேண்டும் என்பது அவர்
கருத்து. சொல்லதிகாரத் தோற்றுவாயில்17 அவர் இக்கருத்தை விளக்கிவிட்டுப்
பொதுவியலை இடை உரியியலுக்குப் பின்னர், நூலின் இறுதியில் வைத்துவிட்டார். இந்த
மாற்றத்துக்கு ஏற்றவாறு உரியியலில் உள்ள புறனடை நூற்பாக்கள் இரண்டை
எடுத்துப்பொதுவியலின் இறுதியில் வைத்தார். அவரிடம் தமிழ் பயின்ற போப் பதிப்பித்த
நன்னூல் பொழிப்புரையிலும் (1857) இந்த முறையே காணப்படுகிறது. ஆனால் இந்த
நூற்றாண்டில் நன்னூலுக்குக் காண்டிகையுரை எழுதிய உரையாசிரியர்களுள் பவானந்தம்
பிள்ளையைத் தவிர வேறு யாரும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

     உண்மையைச் சொன்னால் கவிராயரின் இந்த வைப்புமுறை மாற்றம் புதியதே
அல்ல. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் இறுதியில் எச்சவியல் இருப்பதைத் தழுவி,
வைத்தியநாத தேசிகர் தமது இலக்கண விளக்கத்தில் சொல்லதிகாரத்தின் இறுதி
இயலாகப் பொதுவியலை அமைத்தார். அந்த முறைவைப்பின் தழுவலே18 கவிராயர்
நன்னூலில் செய்த இந்த இயல் மாற்றம் தமது உரையில் இயலை மட்டும் அவர் மாற்றி
வைக்கவில்லை. “தொல்லை வடிவின” (நன். 98) என்னும் நூற்பாவில், “எகர
ஒகரமெய்”
என்பதை, “ஏகார ஓகாரமெய்” என்று (1847. பக். 46) நன்னூல்
மூலபாடத்தையும் அவர் திருத்தி அமைத்துக்கொண்டார். அவ்வாறு திருத்தியதற்குப்,
“பழையன கழிதலும் புதியன புதியன புகுதலும்”
என்னும் புறனடை விதி (நன். 462),
“இறந்தது விலக்க லெதிரது போற்றல்” என்னும் உத்திகள் (நன். 14) வழக்கு மிகுதி
ஆகிய மூன்று காரணங்களையும் அவர் காட்டுவார். ஆராய்ச்சிக்கு உரியது நன்னூலின்
மூல அமைப்பு; அவர் காட்டும் காரணங்கள் அல்ல. எனவே காலம் காலமாக
வழங்கிவரும் மூலநூலின் இயல் அமைப்பையும் பாடத்தையும் கவிராயர்
________________________ 
     17இராமாநுச கவிராயர், நன்னூல் விருத்தியுரை, (சென்னை), 1847. பக். 146.
     18இராமாநுச கவிராயர் இலக்கண விளக்கத்தைத் தமது உரையில் பல
இடங்களில் (சிற.பாயி., நூ. 58, 260, 323, 338, 348, 396, 410, 439)
எடுத்துக்காட்டியுள்ளார்.