பக்கம் எண் : 172
  

நன்னூல் விருத்தியுரை
 

எழுத்துக்களின் உருவம்
 

{98} 

தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
டெய்து மெகர வொகரமெய்* புள்ளி.

     எ-னின்95 நிறுத்த முறையானே (57) உருவம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: எல்லா எழுத்தும் பல வேறு வகைப்பட வரைந்து வழங்கும் பழைய
வடிவினை உடையவாம். அவ்வடிவினவாய் வழங்குமிடத்துத் தனித்தும் உடம்பு ஊர்ந்தும்
வரும் எகர ஒகரங்களும் தனிமெய்களும் இயல்பாய புள்ளியைப் பிற்காலத்து ஒழித்து
வரைந்து, ஏகார ஓகாரங்களோடும் உயிர்மெய்களோடும் ஐயப்பட வழங்கும் வழக்கினை
உடையவன்றித் துணியப்படும் தொல்லை வடிவினது உறுப்பாய புள்ளியைப் பெறும் எ-று.

     வ-று: எ, எ; ஒ, ஒ; கெ, கெ; கொ, கொ; க, க என வரும் பிறவும் அன்ன. (43)
 

எழுத்துக்களின் மாத்திரை
 

{99} 

மூன்றுயி ரளபிரண் டாநெடி லொன்றே
குறிலோ டையௌக் குறுக்க மொற்றள
பரையொற் றிஉக் குறுக்க மாய்தங்
கால்குறண் மஃகா னாய்த மாத்திரை.

     எ-னின், நிறுத்த முறையானே (57) மாத்திரை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: உயிரளபெடைக்கு மாத்திரை மூன்று ஆம். நெடிலுக்கு மாத்திரை இரண்டு
ஆம்.96 குறிலுக்கும் ஐகாரக் குறுக்கத்திற்கும் ஒளகாரக் குறுக்கத்திற்கும்
ஒற்றளபெடைக்கும் தனித்தனி மாத்திரை ஒன்று ஆம். ஒற்றிற்கும் குற்றியலிகரத்திற்கும்
குற்றியலுகரத்திற்கும் ஆய்தத்திற்கும் தனித்தனி மாத்திரை அரை ஆம். மகரக்
குறுக்கத்திற்கும் ஆய்தக் குறுக்கத்திற்கும் தனித்தனி மாத்திரை கால் ஆம் எ-று.

     உயிர்மெய்க்கு அளவு கூறாது ஒழிந்தார் மேல் (89) உயிர் அளவாய் என்று
உரைத்தலின். இஃது உரைத்தாம் என்னும் உத்தி.
-------------------------------
     95“மெகர மொகரமெய்” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம். இராமாநுச
கவிராயர், “ஏகார மோகாரமெய்” என்று (நன். 98) மூலபாடத்தைத்
திருத்திக்கொண்டார்.
     96“ஆம் என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி மத்திம தீபமாகப் பொருள்
உரைத்துக்கொள்க,” என்னும் குணசாகரர் உரை (யா. கா. 7) இவண்
ஒப்புநோக்கத் தக்கது.