பக்கம் எண் : 174
  

நன்னூல் விருத்தியுரை
 

எனவும் மேலைச் சூத்திரத்து எழுத்தொலிகளை வேண்டியவாறே எழுப்பாது,
இவ்அளவான் அளந்து எழுப்புக எனவும் கூறினார்.

     பின்னது நிறுத்தல் என்னும் உத்தியான் இவ் அளவுகருவி பிற் கூறப்பட்டது. (45)
 

மாத்திரைக்குப் புறனடை
 

101.

ஆவியு மொற்று மளவிறந் திசைத்தலும்
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின்.
  
     எ-னின், தவளைப்பாய்த்தாய் ஒன்று இடையிட்டு நின்ற மேலதற்கு (99) ஓர்
புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: முதல், சார்பு அனைத்தும் ஆய ஆவியும் ஒற்றும் மேற் கூறிய (99)
அளவிறந்து மிக்கு ஒலித்தலையும் பொருந்தும் இசை, விளி, பண்டமாற்று    
முதலியவற்றின்கண் எ-று.

     ‘ஆதி’ என்றமையான் நாவல், குறிப்பிசை, முறையீடு, புலம்பலும் கொள்க.

     இசையின் அளவிறந்து இசைக்குங்கால் ஆவி பன்னிரண்டு மாத்திரை ஈறாகவும்
ஒற்று பதினொரு மாத்திரை ஈறாகவும் இசைக்கும்99 என்றார் இசைநூலார். இது பிற நூல்
முடிந்தது தான் உடன்படுதல் என்னும் உத்தி. ஏனையவற்றின் அளவிறந்து
இசைக்குங்கால் உலகநடை பிறழாது இசைப்பதே வரையறை என்க.

     நாவல் என்பது100 நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதோர் சொல்.

     “காவ லுழவர் கடுங்களத்துப் போரேறி
     நாவலோஒஒஒ வென்றிசைக்கு நாளோதை - மாவலவன்
     கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே
     நல்யானைக் கோக்கிள்ளி நாடு” (முத்.*)

என்பதனால் அறிக.

“கஃஃஃ றென்னுங் கல்லத ரத்தம்” (நன். 100 மயிலை.)
-------------------------------
     99உயிரும் ஒற்றும் இவ்வாறு நீண்டு ஒலிக்கும் எனக் கந்தருவ நூலுடையார் கூறுவதாக மயிலைநாதர் (நன். 100) குறிப்பிடுவார்.
     100நாவல் என்னும் சொல்லுக்குப் போர்க்கு அழைத்தல் என்று மயிலைநாதரும் (நன். 100) உழவர் நெல்லரி தொழுவரை விளித்தல் என்று வைத்தியநாத தேசிகரும் (இல. விள. 25) பொருள் கூறுவர்.