| நன்னூல் விருத்தியுரை | | “சுஃஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை” (தொல். செய். 11 பேர்.) என்பன குறிப்பிசை. ஏனைய பொருள் தோன்றிக் கிடத்தலின் அளவிறந்து இசைத்தல் வந்தவழிக் காண்க. (46) | | முதனிலைப் பொதுவிதி | | 102. | பன்னீ ருயிருங் கசதந பமவய ஞஙவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல். | எ-னின், நிறுத்த முறையானே. (57) மொழிக்கு முதல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பன்னிரண்டு உயிரும் உயிர் ஊர்ந்த இப்பத்து மெய்யும் மொழிக்கு முதலாம் எ-று. உ-ம்: அடை, ஆடை, இடை, ஈடு, உடை, ஊடல், எடு, ஏடு, ஐயம், ஒதி, ஓதி, ஒளவியம் எனவும் களி, சவடி, தளிர், நலம், படை, மலை, வளம், யவனர், ஞமலி, அங்ஙனம் எனவும் வரும். பிறவும் அன்ன. உயிர்போல் தனித்து முதலாம் தன்மைய அல்ல ஆதலின், ‘உயிர் மெய்’ என்றார். இஃது இன்னதல்லது இது என மொழிதல் என்னும் உத்தி. (47) | | முதனிலைச் சிறப்புவிதி | | 103. | உஊ ஒஓ வலவொடு வம்முதல். | எ-னின், பொதுவிதியுள் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இந்நான்கும் அல்லாத எட்டு உயிரோடும் வகரம் மொழிக்கு முதலாம் எ-று. உ-ம்: வளி, வாளி, விளி, வீளி, வெளி, வேளை, வைகல், வௌவு என வரும். (48) | | 104. | அஆ உஊ ஓஒள யம்முதல். | எ-னின், இதுவும் அது. இ-ள்: இவ் ஆறு உயிரோடும் யகரம் மொழிக்கு முதலாம் எ-று. | |
|
|