பக்கம் எண் : 176
  

நன்னூல் விருத்தியுரை
 

       உ-ம்: யவனர், யானை, யுகம், யூகி, யோகம், யௌவனம் என வரும்.

     மேலை, “ஒடு”வை (நூ. 103) வருவித்துக்கொள்க. (49)
 

{105} 

அஆஎ ஒவ்வொ டாகு ஞம்முதல்.
  
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: இந்நான்கு உயிரோடும் ஞகரம் மொழிக்கு முதலாம் எ-று.

     உ-ம்: ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று என வரும். (50)
 

{106}

 சுட்டியா வெகர வினாவழி யவ்வை
ஒட்டி ஙவ்வு முதலா கும்மே.
  
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: மூன்று சுட்டும் யா வினாவும் எகர வினாவும் ஆய இடைச்சொற்களின் பின்
அகரத்தை ஒட்டி, ஙவ்வும் மொழிக்கு101 முதலாம் எ-று.

     உ-ம்: அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என வரும்.

     இவற்றை அங்கு, எங்கு என்றாற்போல ஒருமொழிகள் என்றால் என்னை எனின்
அஞ்ஞான்று, எஞ்ஞான்று என்பனபோலப் பிளவுபட்டு, இடையே மெல்லொற்று மிக்கு
வருதலின் தொடர்மொழிகளேயாம் என்க.

     ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பல பொருள் ஒரு
சொல்லாய் வரினும் தனித்து வரும் தன்மையதன்றி, முடவன் கோல் ஊன்றி
வந்தாற்போலச் சுட்டு வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான், ‘வழி’
என்றும் ஏனைய மெய்கள்போல முதலாகாமையின் அவ்வோடு என்னாது, ‘ஒட்டி’
என்றும் ஒருவாற்றான் முதலாதலின் இழிவுசிறப்பாக, ‘ஙவ்வும்’ என்றும் கூறினார்.
இங்ஙனம் கூறலான் ஙகரம் மொழிக்கு முதலாகாது என்பார்க்கு102 உடன்படலும்
மறுத்தலுமாய்ப் பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே என்னும் மதம்படக் கூறினார்
என்று உணர்க.
----------------------------
     101இவ்வாறு அகரத்தைச் சார்ந்து ஙகரம் மொழிக்கு முதலாகும் என்பது,
“பயனில் கூற்று” என்று வைத்தியநாத தேசிகர் (இல. விள. 27) பவணந்தி
முனிவரை மறுப்பார்.
     102தொல்காப்பியர் (மொழி. 28-32), புத்தமித்திரனார் (வீர. 7), குணவீர
பண்டிதர் (நேமி. 7) ஆகியோர் ஙகரம் மொழிக்கு முதலாகாது என்பர்.