பக்கம் எண் : 21
  

பதிப்புரை
 

கருத்தும் கணக்கும் பிழை. எப்படி இருந்தாலும் தோன்றிய காலம் முதல் இன்று வரை
நன்னூலுக்கு உரை காணும் பெருமுயற்சி தொடர்கிறது. சென்ற நூற்றாண்டின
தொடக்கத்திலிருந்து வெவ்வேறு நோக்கங்களோடு நன்னூலுக்குப் பல புதிய உரைகள்
தோன்றின. அவற்றை எல்லாம் பழைய உரைகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து மதிப்பீடு
செய்த பின் நன்னூலுக்கு உரைப்பணி செய்தோரைக் கணக்கிடுவது முறை. அவ்வாறு
செய்தால் நன்னூலுக்கு உரைப்பணி செய்தோரின் தொகை கணிசமாகக் குறைந்துவிடும்.
 

மயிலைநாதர்
 

     நன்னூலின் பழைய உரையாசிரியர் மயிலைநாதர். அவருடைய உரையில்
காணப்படும், “இதற்குப் பிறவாறு சொல்லுவாரும் உளர்.” (நன். 271) என்பது
போன்ற சொல்லாட்சி மயிலைநாதருக்கு முன்னரோ அல்லது அவர் காலத்திலோ
நன்னூலுக்கு வேறு உரை இருந்திருக்கலாம் என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. அது
ஆசிரியர் மாணவர் வழியில் வாய்மொழியாக வழங்கிய உரையா? எழுத்து வடிவில
ஏட்டில் நிலவிய உரையா என்று சொல்வதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.
எனவே கிடைத்துள்ள நன்னூல் உரைகளில் மயிலைநாதர் உரையே காலத்தால
முந்தியது. அதனால் இதற்குப் பழைய உரை என்ற பெயரும் உண்டு. இவ்வுரை சைன
முனிவர் உரை என்றும் சைனர் உரை என்றும்22 அழைக்கப்பட்டது என்பார்கள். இது
செவிவழிச் செய்தியே தவிர நூல்வழிச் செய்தி அல்ல. அதாவது நூல்களில் அல்லது
பழைய உரைகளில் இப்பெயர்கள் பதிவானதாகத் தெரியவில்லை.

     மயிலைநாதர் பதினான்காம் நூற்றாண்டினர் என்றும் சமண மதத்தினர் என்றும்23
கூறுவார்கள். செறிவும் தெளிவும் அவர் உரையின் சிறப்பியல்புகள். வினாவிடைகள், மறுப்புரைகள் போன்றவை அவர் உரையில் குறைவு. அதனால் அது காண்டிகையுரை என்றும் சொல்லப்படும். மயிலைநாதர் உரையின் அமைப்பை ஆழ்ந்து நோக்கினால் அது விருத்தியுரை என்பது எளிதில் விளங்கும். சிறப்புப் பாயிரத்தின் உரையை அவர் பாயிர நூற்பாக்களின் இறுதியில் வைத்து உரை கூறுவது ஆராய்தற்கு உரியது. அதற்கு அவர் நடைநயம் தோன்ற வரைந்துள்ள பதவுரை பல முறை படித்து மகிழத் தக்கது. நன்னூலுக்கு அவர் வரைந்துள்ளது பொழிப்புரை. நான்கு நூற்பாக்களுக்கு மட்டுமே
(நன். 55, 107, 150, 187) பதவுரை காணப்படுகிறது. அவரது உரைநடை தொடைநயமும் கவிதைச் சுவையும் கொண்டது. முந்தைய நூலாசிரியர்களை,

_________________________
     22சி. வை. தாமோதரம் பிள்ளை, இலக்கண விளக்கம் மூலமும் உரையும்,
சென்னபட்டணம், 1889, பதிப்புரை பக். 6; சாமிநாதையர், 1918. முகவுரை
பக்.  ii. 
    23சாமிநாதையர், 1918. பக்.  xvii  மு. அருணாசலம், இலக்கிய வரலாறு,
பதினான்காம் நூற்றாண்டு, திருச்சிற்றம்பலம், 1969. பக். 113.