பக்கம் எண் : 24
  

பதிப்புரை
 

யாரைக் கருதி எழுதப்பட்டது? இதற்கான விடை இலக்கண விளக்கத்தில் கிடைக்கிறது.
அதன் உரையில், “மொழி முதற்கண் தனித்து வரின் சுட்டு என்றாரும் உளராலோ
எனின், “சுட்டு வகரம்”
(நன். 235) எனவும், “சுட்டின்முன் ஆய்தம்” (நன். 251)
எனவும் உறுப்பாய் வருவனவற்றையும் சுட்டு என்று அவர்தாமே ஆளுதலானும்,
ஆசிரியர் தொல்காப்பியனாரும் “அஇஉ அம் மூன்றும் சுட்டு.”
(தொல். நூன். 31)
எனப் பொதுப்படக் கூறிச், “சுட்டுமுதல் உகரம்”
(தொல். உருபு. 4) எனவும்,
“சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி”
(தொல். உருபு. 5) எனவும் பிறாண்டும்
உறுப்பாய் வருவனவற்றையும், “சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்”
(தொல். உயிர். 3) எனவும், “சுட்டின் இயற்கை” (தொல். உயிர். 36) எனவும்
பிறாண்டும் சார்ந்து வருவனவற்றையும் சுட்டு என்று ஆளுதலானும் அவர்க்கு
அது கருத்து அன்று என்க.”
(இல. விள. 6) என்று வைத்தியநாத தேசிகர் ஒரு
மறுப்புரை வரைந்துள்ளார்.

     இம்மறுப்புரையில் வைத்தியநாத தேசிகர் நன்னூல் சூத்திரங்கள் இரண்டை
(நன். 235, 251) எடுத்துக்காட்டுவதாலும், “அவர்தாமே ஆளுதலானும்” என்று
சுட்டுவதாலும் நாம் அறிய வேண்டிய செய்திகள் மூன்று. இங்கு மறுக்கப்பட்டவர்
பவணந்தி முனிவர்; மறுக்கப்பட்டது நன்னூல் சூத்திரம்; மறுப்புரை வரைந்தவர்
வைத்தியநாத தேசிகர்26 என்னும் மூன்று. இவரே நன்னூல் சூத்திரத்தின்,
“முதற்றனிவரிற் சுட்டே” (நன். 66) என்ற தொடரில் பெருங்குற்றம் கண்டு அதற்கு
மாறாக, “மொழிமுதல் வரிற்சுட்டு” (இல. விள. 6) என்று நூற்பா இயற்றியவர்;
நன்னூல் சூத்திரத்துக்கு அளவிறந்த குற்றம் கூறியவரும் இவரே. மேலும் நன்னூலுக்குப்
பிறகு இலக்கண விளக்கத்தைத் தவிரக் குறிப்பிடுமாறு வேறு இலக்கணம்
தோன்றாததால், “நன்னூலார்க்குப் பின்னூலார்” என்று சாமிநாத தேசிகர் சுட்டுவது
வைத்தியநாத தேசிகரையே குறிக்க வேண்டும். பின்னூலார் என்ற சொல்லாட்சி
இப்பொருளில் இலக்கணக் கொத்தில் வேறொரு இடத்திலும் (நூ. 9 உரை) வருகிறது.

     இந்த மறுப்புரைக்கு முத்தாய்ப்பாக அமைவது,
        
  “முன்னூல் ஒழியப் பின்னூல் பலவினும்
நன்னூ லார்தமக்கு எந்நூ லாரும்
இணையோ என்னும் துணிவே மன்னுக.”
----------------------------
     26தண்டபாணி தேசிகரும் (நன்னூல் விருத்தியுரை, 1957. பக். 57)
இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.