பதிப்புரை | (இல. கொ. 8 உரை) என்று சாமிநாத தேசிகர் இயற்றியுள்ள உரைச் சூத்திரமே. “முதற் றனிவரிற் சுட்டே” (நன். 66) என்னும் சூத்திரத்தின் சொல்லமைதியையும், “அவர்க்கு அது கருத்து அன்று” என்னும் தொடரால் பவணந்தி முனிவரையும் குறை கூறிய வைத்தியநாத தேசிகரை மறுப்பதே இந்த உரைச் சூத்திரத்தின் உட்பொருள். நன்னூலுக்குப் புகழாரம் புனையும் இந்த உரைச் சூத்திரத்தை அதனால்தான் சாமிநாத தேசிகர் தமது மறுப்புரையின் இறுதியில் அமைத்துள்ளார். இவற்றை எல்லாம் ஒருசேரத் தொகுத்து நோக்காமல் சாமிநாத தேசிகரின் மறுப்புரை மயிலைநாதரைக் குறிப்பதாக வலிந்து கொள்வது ஒரு வகையிலும் ஒவ்வாது. ஆகவே நன்னூல் சூத்திரத்துக்குக் குற்றம் கூறிய பின்னூல் ஆசிரியர் என்னும் மறுப்புரைக்கு இலக்கானவர் வைத்தியநாத தேசிகர்; மயிலைநாதர் அல்லர் என்பதே முறையான முடிபு. சிவஞான முனிவர், “நன்னூலார் மொழி முதற்கண் சுட்டுப் பொருள் உணர்த்தி வரினல்லது சுட்டெழுத்து ஆகா என்பார், “தனிவரிற் சுட்டு” (நன். 66) என்றார். தாமும் அவ்வாறு கூறாது எவ்வாறு வரினும் சுட்டெழுத்தாம் என்று பொருள்பட வாளா, “மொழிமுதல் வரிற்சுட்டு” (இல. விள. 6) என்றதுவும் அன்றி, அவர் கருத்து அறியாது குற்றமும் கூறினார்.” என்று வைத்தியநாத தேசிகரை மறுத்து இலக்கண விளக்கச் சூறாவளியில் (பக். 91) எழுதியுள்ள குறிப்பும் இம்முடிபை உறுதிப்படுத்தும். சாமிநாத தேசிகர் மறுப்புரையின் முற்பகுதியில் (இல. கொ. 8 உரை) ஊன்றி நோக்க வேண்டிய இரண்டாவது தொடர், “அதுபற்றித் தமக்கு என ஒன்று இலரும் அதுவே.” என்பது. இத்தொடர் யாரைப் பற்றியது என்ற கேள்விக்கும் இலக்கண விளக்கமே விடை தருகிறது. வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் ஒரு படைப்பு நூல்27 அல்ல; தொல்காப்பியம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம், நன்னூல் போன்ற நூல்களிலிருந்து நூற்றுக் கணக்கான நூற்பாக்களை அள்ளி அமைத்துக்கொண்ட ஒரு வகைத் தொகுப்பு நூல். ஆசிரியர் இயற்றிய நூற்பாக்கள் அந்நூலில் குறைவு. விளங்கச் சொன்னால் இலக்கண விளக்கத்தில் நூலாசிரியரின் சொந்தக் கருத்துகளை விடப் பிற நூல்களிலிருந்து அவர் எடுத்துக்கொண்ட இரவல் கருத்துகளே மிகுதி. இந்த உண்மையை உள்ளடக்கி, வைத்தியநாத தேசிகரின் நூலாக்க முறைபற்றிச் சாமிநாத தேசிகர் செய்த ஒரு வரி விமர்சனமே அந்த இரண்டாவது தொடர். அவரைப் பின்பற்றிச் சிவஞான முனிவரும், “இவ்விலக்கண விளக்க நூலுள், “எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்” (தொல். உரி. 1) என இவரால் ----------------------- 27இக்கருத்துரை அதன் உரைக்கும் பொருந்தும். | |
|
|