| நன்னூல் விருத்தியுரை |
கவித்தான், சாந்தமும் முலையும் தழுவினான் என வேறு வினைப் பல்பொருள் விரவிச் சிறப்பினான் ஒரு முடிபு ஏற்றன. பிறவும் அன்ன. இங்ஙனம் இறுதிக்கண் கூறிய மரபு வழுவமைதி, “வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொலும்” (நூ. 389) என்னும் சூத்திரத்தோடு மாறுகொளக் கூறலாம் பிற எனின் சிறப்பு முதலிய கருதாது ஒத்த நிலைமையின் எண்ணியவழி முடியும் மரபு அங்ஙனம் கூறுதலின் அது மாறுகொளக் கூறல் அன்று என்க. |
| | “பாணன் பறையன் கடம்பன் றுடியனென் றந்நான் கல்லது குடியு மில்லை” (புறம். 335:7-8*) |
என உயர்திணை எண்ணி, அஃறிணை முடிபினவாய வழு யாண்டு அமைக்கப்படும் எனின் குடி என்பதனைப் பாணன் முதல் நான்கோடும் கூட்டி உரைக்கப்படுதலின் வழாநிலையாம் என்க. இனிப் பால் விரவி ஒரு முடிபு ஏற்பனவற்றிற்கு ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ இச்செய் புக்கார் என உதாரணம்376 காட்டின், “ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும்” (நூ. 376) என்பதனான் வந்தனவன்றி ஈண்டைக்கு ஆகாமையானும் இங்ஙனம் காட்டிய இலக்கியங்கட்கு இலக்கணம் இன்மையானும் அது காட்டு அன்று என்க. (27) |
| பால் திணைகளுக்கு வழுவமைதி |
| 379. | உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே. |
எ-னின், திணைபால் வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உவப்பு முதலிய ஐந்தினும் பாலும் திணையும் வழுவி வரினும் இயல்பாம் எ-று. பாலை முற் கூறினார் அவ்வழுவமைதி பயின்று வருதலின். ‘இழுக்கினும்’ என்னும் உம்மை உவப்பு முதலியவற்றின் இழுக்கியே வரும் என்னும் நியதிய அல்ல என்னும் பொருள் தந்து நின்றது. வ-று: தன் புதல்வனை என் அம்மை வந்தாள் என்பது உவப்பின் ஆண்பால் பெண்பால் ஆயிற்று. ஒருவனை அவர் வந்தார் என்பது உயர்வின் ஒருமைப்பால பலர்பால் ஆயிற்று. ---------------------------------- 376மயிலைநாதர் (நன். 377) இவ்வாறு உதாரணம் காட்டுவார். |