பக்கம் எண் : 455
  

நன்னூல் விருத்தியுரை

சொல்லைத் தழுவிக் கூறுதலும் உளவாம் எ-று.

     வ-று: வெயில் எல்லாம் மறைத்தது மேகம். இக்குளத்து நீர் எல்லாம்
கொண்டுய்த்தான் இவன் எனவும் இரண்டு கண்ணும் சிவந்தது, “இருநோக் கிவளுண்க
ணுள்ளது” (குறள். 1091) எனவும் அஃறிணைக்கண் ஒருமையின் பன்மையும் பன்மையின்
ஒருமையும் வந்தன.
 
  “அகுதை தந்தை
அண்ணல் யானை யடுபோர்ச் சோழர்” (அகம். 96:12-13*)
 
எனவும்,
 
  “புலைய னெறிந்த பூசற் றண்ணுமை
ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப” (த. விள. 24* உரை)
 
எனவும் உயர்திணை ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும் வந்தன. சாத்தன்
தாய் இவை செய்வலோ,
 
  “கல்விய னென்னும் வல்லாண் சிறாஅன்
ஒல்வே னல்ல னதுவா யாகுதல்” (புறம். 346:3-4*)
 
என்பது தன்மையின்கண் படர்க்கை வந்தது.
 
  “திண்பொரு ளெய்த லாகுந் தெவ்வரைச் செகுக்க லாகும்
நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையு நண்ண லாகும்
ஒண்பொரு ளாவ தையா வுடன்பிறப் பாக்க லாகா
எம்பியை யீங்குப் பெற்றே னென்னெனக் கரிய தென்றான்” (சீவக. 1760)
 
என்பது முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. நீயோ அவனோ யார் இது செய்தார்?
யானோ அவனோ யார் இது செய்தார்? நீயோ யானோ யார் இது செய்தார்? நீயோ
அவனோ யானோ யார் இது செய்தார் என விரவி, ஓர் இடத்தின்கண் பிற இடம்
வருதலும் கொள்க. பிறவும் அன்ன.

     ஒரு பாற்பொருளை மற்றொரு பாற்சொல்லானும் ஓர் இடப்பொருளை மற்றோர்
இடச்சொல்லானும் கூறுதலின் வழுவாய், அவை சான்றோர்க்கு ஒப்ப முடிந்தமையின்
அமைதி ஆயின.