பக்கம் எண் : 456
  

நன்னூல் விருத்தியுரை

     “ஒருவி ரொருவி ரோம்பினிர் கழிமின்” (மலைபடு. 218), யான் எம் ஊர் புகுவன்
என்பன ஒருமையிற் பன்மை வந்த வழுவமைதி எனின் ஒருவிர் ஒருவிர் ஓம்பினை
கழிவை எனின் வழாநிலையாக வேண்டும். அங்ஙனம் ஆகாமையின், “ஒருவ ரென்ப
துயரிரு பாற்றாய்” (நூ. 289) என்னும் சூத்திரத்துள், “ஒருமொழி யொழிதன
னினங்கொளற் குரித்தே” (நூ. 358) என்பதனான் அமைந்த வழாநிலையாம். யான் எம்
ஊர் புகுவன் என்புழித் தன் கிளையினைத் தன்னொடு படுத்து எம் ஊர் என்றான்
ஆதலின் வழாநிலையாம். இத்தொடக்கத்து வழாநிலைகளை இவ்வழுவமைதியாக
உதாரணம் கூறுவார்378 கூற்றை எல்லாம் உய்த்துணர்ந்து களைக. (29)
 

இடம் வழுவாமல் காத்தல்
 

381.

தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும்.
 
     எ-னின், இடம் வழுவற்க எனக் காத்தல் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இந்நால் வகைச் சொற்களையும் படர்க்கை சாரும்; இவற்றுள் முதற்கண்
நின்ற தரல், வரல் என்னும் இருவகைச் சொற்களையும் தன்மை முன்னிலைகள் ஏற்கும்
எ-று.

     ‘தரல்வரல் கொடைசெலல்’ என்பன அப்பகுதிகளை உணர்த்தி நின்றன.

     வ-று: அவனுக்குத் தந்தான், அவன்பால் வந்தான், அவனுக்குக் கொடுத்தான்,
அவன்பால் சென்றான் எனவும் எனக்குத் தந்தான், என்பால் வந்தான் எனவும்
நினக்குத் தந்தான், நின்பால் வந்தான் எனவும் வரும். இப்பகுதியில் பிறந்த ஏனைய
வினை விகற்பங்களோடும் தொழிற்பெயரோடும் இவ்வாறே ஒட்டுக.

     இவை படர்க்கை, இவை தன்மை, முன்னிலை என்னாது, ‘சாரும்’ ‘ஏற்கும்’
என்றமையான் இடவிகுதிகள்போல் இவை இடப்பகுதிகள்379 ஆகாது, அவ்விடங்கட்கு
இயைந்த மரபினவாம் என்பதூஉம் தரல், வரல் என்னும் இரண்டனையும் தன்மை
முன்னிலைக்கும் கூட்டினமையின் படர்க்கைக்கே சிறந்தன கொடை, செலல் என்னும்
இரண்டும் என்பதூஉம் ஏனைத் தரலும் வரலும் அத்துணைச் சிறப்பின அல்ல
என்பதூஉம் இந்நெறி மயங்கி எனக்குக் கொடுத்தான், என்பால் சென்றான், நினக்குக்
கொடுத்தான், நின்பால் சென்றான் என வரின் முன்னர்க் கூறிய இட
வழுவமைதியின்பாற் படும் என்பதூஉம் பெற்றாம். படர்க்கைக்குப் பின்னைய
----------------------------------
     378மயிலைநாதர் (நன். 379) இவ்வாறு உதாரணம் காட்டுவார்.
     379சேனாவரையரும் நச்சினார்க்கினயரும் (தொல். கிளவி. 28) வைத்தியநாத
தேசிகரும் (இல. விள. 301) இவற்றை இடப்பகுதிகள் என்பர்.