பக்கம் எண் : 458
  

நன்னூல் விருத்தியுரை

இ-ள்: தம் தொழில் இடையறாது, முக்காலத்தினும் ஒரு தன்மையவாய் இயலும்
பொருள்களை நிகழ்காலத்தால் கூறுவர் புலவர் எ-று.

     வ-று: அவனியைத் தாங்கி அரசர்381 இருக்கிறார், நினக்குத் துணை யான
இருக்கிறேன், எனக்குத் துணை நீ இருக்கிறாய், தெய்வம் இருக்கிறது, நிலம் கிடக்கிறது,
மலை நிற்கிறது, யாறு ஒழுகுகிறது என வரும்.

     இதற்குச் செய்யும் என்னும் முற்றை உதாரணம் காட்டுவாரும்382 உளர். அது
பல்லோர்படர்க்கை, முன்னிலை, தன்மையாக வரும் முக்காலத்தினும் ஒத்து இயல்
பொருட்கு இயையாமையானும் அவ்வழக்கு இன்மையானும் அது பொருந்தாது என்க.
யாறு ஒழுகும், தீச் சுடும் என வழங்குமாலோ எனின் அது ஒழுகும் தன்மையை
உடையது, சுடும் தன்மையை உடையது என்னும் பொருட்டாய் நிற்றலின், “இயற்கைப்
பொருளை யிற்றெனக் கிளத்தல்” (நூ. 404) என்னும் சூத்திரத்தின்பாற் படும் என்க.
யாறு ஒழுகுவது, தீச் சுடுவது என்பதும் அது. (32)
 

{384}

விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும்
பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: விரைவு, மிகுதி, தெளிவு என்னும் மூன்று காரணத்தினானும
இக்காரணமின்றியும் முக்காலங்களையும் ஒன்றை ஒன்றாகக் கூறப்படும் ஏற்குமிடத்து
எ-று.

     காரணமின்றி என்பார், ‘இயல்பினும்’ என்றும் பிறழ்தல் ஒருதலை அன்று என்பார்,
‘பிறழவும்’ என்றும் விரைவு முதலிய நான்கினும் தனித்தனி முக்காலங்களும் முறையே
பிறழா என்பார், ‘ஏற்புழி’ என்றும் கூறினார்.

     வ-று: சோறு வேவாநிற்ப, அஃது உண்டு போதற்பொருட்டாக இருந்தோன்
ஒருவனைப் புறத்து நின்றான் ஒருவன் இருவரும் போக வேண்டும் குறையுடைமையின்
இன்னும் உண்டிலையோ என்றால் உண்டேன் உண்டேன் என்னும்; உண்ணா நின்றானும்
உண்டேன் உண்டேன் என்னும். இவை விரைவின் எதிர்காலமும் நிகழ்காலமும்
இறந்தகாலம் ஆயின.
------------------------------
     381“அவனியைத் தாங்கி அரசர் இருக்கின்றார், நினக்குத் துணை யான்
இருக்கின்றேன், எனக்குத் துணை நீ இருக்கின்றாய்” என்பதும் பாடம்.
     382இளம்பூரணர் (தொல். வினை. 41) முதலிய தொல்காப்பிய
உரையாசிரியர்களும் மயிலைநாதரும் (நன். 382) வைத்தியநாத தேசிகரும் (இல.
விள. 303) இவ்வாறு உதாரணம் காட்டுவர்.