| நன்னூல் விருத்தியுரை | நிகழ்காலம் ஆயினும் நோவு எழுந்த காலம் கருதி உற்றது உரைத்தல் ஆயிற்று. உடம்பு நோம் என்பது உறுவது கூறல். மற்றையது செய்வேன் என்பது இனமொழி. இறை பயப்பனவற்றுள் வினா எதிர் வினாதல் ஒன்றும் நேர்தற்பொருளையும் ஏனைய நான்கும் மறைப்பொருளையும் பயத்தல் காண்க. இறை பயப்பனவற்றை, ‘நிலவிய’ என விசேடித்தமையின் நிலவாதனவும் சில உள எனப் பொருள் உரைத்துச் செய்வேனோ என எதிர்மறை ஓகாரமாயும் யானோ செய்வேன் எனச் சிறப்பு ஓகாரமாயும் நின்று, செய்யேன் என்னும் இறைப்பொருள் பயந்து வருதலும் பிறவும் கங்கை ஆடிப் போந்தேன்; ஒரு கூறை ஈக என வினா இல்வழி இறை நிகழ்தலும் கொள்க. (35) | | வினா விடைகளில் சினைமுதல் வழுவாமை | | {387} | வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல். | எ-னின், வினாவும் செப்பும் முதல்சினை ஒற்றுமை கருதி வழுவக் கூறின் அமையா எனக் காத்தல் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வினாவுதற்கண்ணும் செப்புதற்கண்ணும் சினை முதல்கள் ஒற்றுமை கருதி, மயங்கக் கூறப்படா எ-று. வ-று: கண் பிறழ்ந்ததோ கயல் பிறழ்ந்ததோ எனவும் சாத்தன் நல்லனோ கொற்றன் நல்லனோ எனவும் இவ்வாறு வினாவினார்க்குக் கண் பிறழ்ந்தது, கயல் பிறழ்ந்தது, சாத்தன் நல்லன், கொற்றன் நல்லன் எனவும் வரும். பிறவும் அன்ன. எனவே கண் பிறழ்ந்ததோ எனச் சினையை வினவுவான் அதனை ஒழித்து அதனை உடையாளைக் கருதி, இவள் பிறழ்ந்தாளோ கயல் பிறழ்ந்ததோ என வினவுதலும் இவள் பிறழ்ந்தாள் எனச் செப்புதலும் இவ்வாறு முதலை வினவுவானும் செப்புவானும் அதனை ஒழித்துச் சினையை வினவுதலும் செப்புதலும் வழுவாம் என்பதாயிற்று. இங்ஙனம் ஆயின் குயிலோ கிளவி என வினவுவான் குயிலிசையைக் குயிலோ என்று வினவுதல் வழுவாம் பிற எனின் அவ்வாறு கூறுவான் குயிலைக் கருதாது, அதன் இசையையே கருதிக் கூறுதலானும் குயிலிசையோ கிளவி என இசை என்னும் சொல் எஞ்சி நிற்றலானும் இத்தொடக்கத்தன வழு ஆகா என்க. (36) | | மரபு | | {388.} | எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பின ரப்படிச் செப்புதன் மரபே. | |
|
|