பக்கம் எண் : 462
  

நன்னூல் விருத்தியுரை
 

     எ-னின், மரபு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: யாது ஒரு பொருளை யாது ஒரு சொல்லான் யாது ஒரு நெறியான்
அறிவுடையோர் சொன்னார்களோ அப்பொருளை அச்சொல்லான் அந்நெறியான்
சொல்லுதல் மரபாம் எ-று.

     ‘எவ்வாறு’ என்பது ஒரு பொருளைப் பல சொல்லானும் பல பொருளை ஒரு
சொல்லானும் கூறுதல் முதலியவற்றை என்க. அவற்றுள் சில வருமாறு: குதிரைக்குட்டி,
யானைக்குட்டி எனவும் யானைக்கன்று, பசுவின் கன்று, மான்கன்று எனவும் வரும்.
பிறவும் அன்ன.

     இவ்வாறன்றிப் பசுவின் குட்டி, குதிரைக்கன்று எனக் கூறின் வழுவாம் ஆதலின்
சான்றோர் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் பயின்று வரும் மரபு386 அறிந்துகொள்க.(37)
 

பொதுவினைகள் மரபு வழுவாமை
 

389.

வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொலும்
வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும்.
 
     எ-னின், மரபு வழுவற்க என்பது உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: வெவ்வேறு வினைகட்கு உரிய பல பொருள்களையும் ஒருங்கு தழுவி
நிற்கும் ஓர் பொதுச்சொல்லும் அவற்றின் சிறப்புச்சொற்களாய் எண்ணி நிற்கும் பல
சொல்லும் ஒன்றற்கு உரிய சிறப்புவினை வேண்டாது எல்லாவற்றிற்கும் உரியதோர்
பொதுவினை வேண்டுவனவாம் எ-று.

     வ-று: அடிசில் என்பது உண்பன, தின்பன, நக்குவன, பருகுவனவற்றிற்கு எல்லாம்
பொதுச்சொல் ஆகலான் அதனை அயின்றார், மிசைந்தார் என்க. அணி என்பது
கவிப்பன, கட்டுவன, இடுவன, தொடுவனவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல் ஆதலின்
அதனை அணிந்தார், தாங்கினார் என்க. இயம் என்பது கொட்டுவன, ஊதுவனவற்றிற்கு
எல்லாம் பொதுச்சொல் ஆதலின் அதனை இயம்பினார், படுத்தார் என்க. படை என்பது
எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவனவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல் ஆதலின்
அதனை வழங்கினார், தொட்டார் என்க.
---------------------------
     386இந்நூற்பாவுக்கு மயிலைநாதர் (நன். 387) உதாரணம் காட்டுவதோடு,
‘ஐம்பெருங்காப்பியம், என்பெருந் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்
கீழ்க்கணக்கு என்னும் இவ்விலக்கியங்களுள்ளும் விரிந்த உரிச்சொல்
பனுவல்களுள்ளும் உரைத்தவாறு” பெயர்களை மரபு அறிந்து வழங்குக என்று
கூறுவார்.