பக்கம் எண் : 466
  

நன்னூல் விருத்தியுரை
 

அமிழ்தன் என வரும். இவை இயற்பெயர் பின் வந்தன. இனிக் கொற்றன் குன்றவன்
அழகன் அருவாளன் என முறையே இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும்
இயற்பெயர் முன் வருங்கால் வெண்கொற்றப் படைத்தலைவன், வெள்ளேறக் காவிதி
என இறுதி விகாரமாய் வருதலும் காண்க. பிறவும் அன்ன. (42)
 

படர்க்கைப்பெயரோடு சுட்டுப்பெயர் வருமாறு
 

394.

படர்க்கைமுப் பெயரோ டணையிற் சுட்டுப்
பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும்
மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: படர்க்கை இடத்தவாகிய உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர்,
விரவுப்பெயர் என்னும் மூவகைப் பெயரோடு சுட்டுப்பெயர் சாரின் அச்சுட்டுப்பெயர்
அம் மூவகைப் பெயர்க்கும் பின் வரும் அவ்வழி வினை நிகழ்வழி எனின்; வினை
நிகழ்ச்சி இன்றேல் அப்பெயர்க்குப் பின்னும் முன்னும் வரும். இம்மரபு வழக்கின்
கண்ணவாம். செய்யுட்கண்ணே எனின் நியதியின்றி வேண்டியவாறே வரப்பெறும் எ-று.

     வ-று: நம்பி வந்தான் அவற்குச் சோறு இடுக, எருது வந்தது அதற்குப் புல் இடுக,
சாத்தன் தெய்வம் அவற்குப் பலி இடுக, சாத்தன் வந்தது அதற்குப் புல் இடுக என
வினை நிகழ்வழிச் சுட்டுப்பெயர் பின் வந்தன. வந்தான் நம்பி அவற்குச் சோறு இடுக
எனவும் முறையே ஒட்டுக.

     இவற்றுள் சாத்தன் தெய்வம் என்புழி வினையின்றிப் பெயர் வந்ததாலோ எனின்
படர்க்கை முப்பெயரும் தனித்து நில்லாது, பெயர்வினைகளைக் கொண்டு முடிந்தும்
பெயர்வினைகட்குப் பயனிலையாயும் புடைபெயரும் புடைபெயர்ச்சியை வினை என்றும்
அப்புடைபெயர்ச்சி உள்வழிச் சுட்டுப்பெயர் வரின் பின் வரும் என்றும் கூறினாரன்றி
இவ்வினையை வினை என்றார் அல்லர் என்க.

     மைந்தன் பிறந்தான் அதனால் தந்தை உவக்கும் என்புழி அது என்னும் சுட்டு
மைந்தனை அணைந்தது இல்லையாலோ எனின் அவன் தற்கிழமையாகிய பிறத்தலை
அணைதலின் அவனை அணைந்ததேயாம் என்க. அன்றிச், “சொற்றொறு மிற்றிதன்
பெற்றி” (நூ. 461) என்னும் சூத்திரத்தான் அமைத்தலும் ஒன்று. நம்பி அவன், அவன்
நம்பி எனப் பெயர்க்குப் பின்னும் முன்னும் சுட்டுப்பெயர் வந்தன. ஏனைப்
பெயர்களோடும் ஒட்டுக.