பக்கம் எண் : 468
  

நன்னூல் விருத்தியுரை
 

வருக, பொலிக பொலிக பொலிக என்பன உவகை. பாம்பு பாம்பு, தீத் தீத் தீ என்பன
அச்சம். உய்யேன் உய்யேன், வாழேன் வாழேன் வாழேன் என்பன அவலம். இவை
முதலியன பொருள்நிலை. “ஏஏ யம்பன் மொழிந்தனள் யாயே” (தொல். எச்ச. 15*
இளம்.), “நல்குமே நல்குமே நல்குமே நாமகள்” (நன். 394 மயிலை.), “பாடுகோ
பாடுகோ பாடுகோ பாடுகோ” (யா. வி. 51) என்பன இசைநிறை. பிறவும் அன்ன.

     ஒரு சொல்லைப் பல கால் கூறுதல் வழு ஆயினும் இவ்விடத்து ஆம் என்றல்
வழுவமைதியும் இதற்கு இவ்வெல்லை இறவாது என்றல் வழுவற்க எனக் காத்தலும் ஆம்
என்க. (44)
 

இரட்டைக்கிளவி
 

{396}

இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா.
 
     எ-னின்388 மரபு வழுவற்க எனக் காத்தல் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இரட்டைச்சொற்கள் அவ்விரட்டிப்பில் பிரிந்து, தனித்து ஒலியா எ-று.

     எனவே வலிந்து பிரித்துக் கூறின் பொருள்படாது என்பதூஉம் இரட்டித்துக்
கூறுதலே மரபு என்பதூஉம் ஆயிற்று.

     வ-று: “சலசல மும்மதம் பொழிய” (சீவக. 82:1*), “கலகல, கூஉந்துணை யல்லால்”
(நாலடி. 140:2-3), “குறுகுறு நடந்துஞ் சிறுகை நீட்டியும்” (புறம். 188:3*), “வற்றிய
வோலை கலகலக்கும்” (நாலடி. 256:3), “துடிதுடித்துத் துள்ளி வரும்” (நன். 395*
மயிலை.) என வரும்.

     துடிதுடித்து என்புழிப் பின்னையது பிரிந்து இசைக்குமேனும் முன்னையது பிரிந்து
இசையாமையின் இரட்டைச்சொல்லேயாம் என்க. பிறவும் அன்ன. (45)
 

ஒரு பொருளைக் குறிக்கும் பல பெயர்கள்
 

{397}

ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையார்.
 
     எ-னின்389 இதுவும் அது.

     இ-ள்: ஒரு பொருள்மேல் பல பெயர் கூறுங்கால் அப்பொருளினின்றும் பிரிதல்
இல்லாதனவற்றை நீக்காது கூறுவர் புலவர் எ-று.
-------------------------------
     388இது தொல்காப்பிய (கிளவி. 48) நூற்பா.
     389இது தொல்காப்பிய (எச்ச. 64) நூற்பாவின் திரிபு.