| நன்னூல் விருத்தியுரை | | மரபு வழுவமைதி | | {398} | ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா. | எ-னின், மரபு வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒரு பொருளைக் குறித்து வரும் பல சொற்கள் அவ்வாறு வருதற்கு ஓர் காரணம் இன்றேனும் சிறந்து நிற்றலின் அவை வழு என்று நீக்கப்படா எ-று. சிறந்து நிற்றல்-செவிக்குச் சொல்லின்பம் தோன்ற நிற்றல். ‘சிறப்பினின்’ என்றமையால் காரணமின்றி வந்தன என்பது பெற்றாம். வ-று: “மீமிசை ஞாயிறு கடற்பாய்ந் தாங்கு” (நன். 397 மயிலை.), “புனிற்றிளங் கன்று” (பெரிய. திருவாரூர். 22:4), “நாகிளங் கமுகு” (கம்ப. முதற்போர். 255:3), “அடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கல்” (பொருந. 61*), “உயர்ந்தோங்கு பெருவரை” (மலைபடு. 41*), “குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி” (நாலடி. 49:2) என வரும். பிறவும் அன்ன. இனிச், ‘சிறப்பினின்’ என்றதற்கு அப்பொருளைச் சிறப்பித்தலின் எனப் பொருள் கூறுவாரும்392 உளர். அச்சொற்கு அப்பொருள் இயையாமையானும் அக்காரணத்தான் வந்தனவேல் ஈண்டு ஒரு பொருட் பன்மொழியாய் வரும் பெயர்கள் ஒரு பொருட் பல பெயருள் அடங்கும் (397) ஆதலானும் மீமிசை என்றால் மேல் என்றே பொருளன்றி விசேடித்ததோர் சிறப்பு இன்மையானும் உண்டேல் அஃது இஃது என விதந்து கூறுவர் ஆதலானும் அது பொருள் அன்று என்க. (47) | | முற்றும்மை வேண்டும் இடம் | | {399} | இனைத்தென் றறிபொரு ளுலகி னிலாப்பொருள் வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும். | எ-னின், மரபு வழுவற்க எனக் காத்தல் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இத்துணைத்து என்று வரையறை உணரப்படும் பொருளும் எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும் அவற்றை வினைப்படுத்துக் கூறுங்கால் முற்றும்மை வேண்டி நிற்கும் எ-று. ------------------------------------ 392மயிலைநாதரும் (நன். 397) வைத்தியநாத தேசிகரும் (இல. விள. 356) இவ்வாறு பொருள் கூறுவர். இராமாநுச கவிராயர் (நூ. 439) வேறு காரணம் காட்டி இவ்வுரையை மறுப்பார். | |
|
|