பக்கம் எண் : 471
  

நன்னூல் விருத்தியுரை
 

     ‘பொருள்’ என வேறு விதந்தமையின், ‘உலகு’ என்றது ஒழிந்த காலம்
அனைத்தினையும் இடம் அனைத்தினையும் என்பதூஉம், ‘இனைத்தென் றறிபொருள்’
என்றமையானும், ‘உலகு’ எனக் காலம் அனைத்தினையும் இடம் அனைத்தினையும்
கூறுதலானும், ‘உம்மை’ என்றது முற்றும்மையை என்பதூஉம் பெற்றாம்.

     வ-று: தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார், உலகம் மூன்றினையும் ஒருங்கு
உணர்ந்தான், நின்கண் வைத்த பொருள் நூற்றினையும் அவ்விருவருக்கும் கொடு,
இறைவற்குக் கண் மூன்றும் முச்சுடர், இறைவற்கு உடை, போர்வை இரண்டும் தோல்
என இனைத்து என்று அறிபொருள் வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டி
நின்றன. இவற்றுள் முச்சுடர், தோல் என்பன பெயராலோ எனின் ஈண்டு வினை
என்றதூஉம், “சுட்டுப், பெயர்பின் வரும்வினை யெனின்” (நூ. 394) என்றது போலும்.

     பவளக்கோட்டு நீலயானை என்றும் இல்லை, முயற்கோடு, ஆகாயப்பூ என்றும்
இல்லை, மண்ணிற் படம் என்றும் இல்லை, நூலிற் கடம் என்றும் இல்லை, ஒளிமுன்
இருள் என்றும் இல்லை என உலகின் இல்லாத பொருள் வினைப்படுத்து உரைப்பின்
உம்மை வேண்டி நின்றன. எவ்விடத்தும் இல்லை எனவும் ஒட்டுக.

     உம்மை வரும் என்னாது, ‘உம்மை வேண்டும்’ என்றமையான் அஃது
இசையெச்சமாய் நிற்க, அதனை வேண்டுவனவாய், “வன்பறழ்க் குமரி இருதோ டோழர்
பற்ற” (நன். 398 மயிலை.), “எருமை நாற்கா னீர்க்கீ ழவ்வே” (நன். 398 மயிலை.)
எனவும் மண்ணிற் படம் இல்லை, நூலிற் கடம் இல்லை, ஒளிமுன் இருள் இல்லை
எனவும் வரும்.

     இவ் இல்பொருளின்கண் காலப்பெயர் இடப்பெயர்களும் உடன் எஞ்சி நின்றன.
இவ்வாறு வருதல் கருதாது, செய்யுள் விகாரமாக உம்மை தொக்கது என்பாரும்393 உளர்.
உலகின் இல்லாப் பொருள் உள்பொருள்போல் காலத்தோடு பட்டது அன்று என்பது
தோன்ற என்றும் இல்லை என்னாது காலத்தோடு பட்டதுபோல வைத்துப்,
பவளக்கோட்டு நீலயானை பண்டும் இல்லை என எச்சவும்மை தந்து, உதாரணம்394
காட்டுவார். அது யானை குடத்தினும் இல்லை; குழிசியினும் இல்லை என்றது போலும்
என்க.
-------------------------------
     393மயிலைநாதர் (நன். 398), சேனாவரையர், நச்சினார்க்கினியர் (தொல்.
கிளவி. 33), வைத்தியநாத தேசிகர் (இல. விள. 315) முதலியோர் செய்யுள்
விகாரமாக உம்மை தொக்கது எனப் பொருள் கூறுவர்.
     394மயிலைநாதர் (நன். 398) எச்சவும்மை தந்து உதாரணம் காட்டுவார்.