| நன்னூல் விருத்தியுரை | இரட்டுற மொழிதலான் உலகின்கண் நிலையில் பொருள் வினைப்படுத்து உரைப்பின் எச்சவும்மை வேண்டும் எனவும் பொருள் உரைத்துக்கொள்க. அவை வருமாறு: செல்வமும் நில்லாது, செல்வமும் பொய் என வரும். செல்வம் நில்லாது, செல்வம் பொய் என எச்சவும்மை கொடாது வாளா கூறின் இளமை, யாக்கை முதலியன நிலைபெறும் எனவும் மெய்ப்பொருள் எனவும் பொருள்படும் என்க. ‘உம்மை வேண்டும்’ என்றதனால் செல்வம் நில்லாது, செல்வம் பொய் என உம்மை எஞ்சி நிற்றலும் கொள்க. (48) | | வழக்கில் கருமம் கருத்தா ஆகுமாறு | | 400. | செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித்தே. | எ-னின்395 மரபு வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: செயப்படுபொருளைக் கருத்தாவைப் போல வைத்து, அதன்மேல் வினைமுதல் வினை ஏற்றிக் கூறுதலும் வழக்கின்கண் உரித்தாம் எ-று. வ-று: இம்மாடு யான் கொண்டது, இச்சோறு யான் கொடுத்தது, இவ்வெழுத்து யான் எழுதியது என வரும். உம்மையால் கருமத்தைக் கருத்தாவாக இவ்வாறு கூறுதலே அன்றிக் கருவி நிலம் செயல் காலங்களைக் கருத்தாவாகக் கூறுதலும் அமையும் என்பது பெற்றாம். அவை வருமாறு: இவ்வெழுத்தாணி யான் எழுதியது, இவ்வீடு யான் இருந்தது, இத்தொழில் யான் செய்தது, இந்நாள் யான் பிறந்தது என வரும். இனி இல்லம் மெழுகிற்று, எழுத்தாணி எழுதிற்று என உதாரணம் காட்டுவாரும்396 உளர். இல்லம் மெழுகிற்று என்பதோர் வழக்கு இன்மையானும் நடத்த நடந்த தேரினைப் போல ஒருவன் எழுத எழுதியது எழுத்தாணி ஆதலின் அது தன் தொழிலே அன்றி ஒருவன் தொழில் அன்று ஆதலானும் அவை காட்டு ஆகா என்க.(49) -------------------------------- 395இது தொல்காப்பிய (வினை. 49) நூற்பாவின் திரிபு. 396இளம்பூரணர் (தொல். வினை. 47) முதலிய தொல்காப்பிய உரையாசிரியர்களும் மயிலைநாதரும் (நன். 399) வைத்தியநாத தேசிகரும் (இல. விள. 357) இவ்வாறு உதாரணம் காட்டுவர். | |
|
|