| நன்னூல் விருத்தியுரை | | இருவழக்கிலும் அடைமொழிகள் வருமாறு | | 401. | பொருண்முத லாறா மடைசேர் மொழியினம் உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும். | எ-னின், மரபு வழுவற்க எனக் காத்தலும் மரபு வழுவமைப்பும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பொருளாதி ஆறாகிய (132) அடைகள் அடுத்து வரும் மொழிகள் இனம் உள்ளனவே ஆமன்றி இனம் இல்லனவும் ஆம் உலக வழக்கினுள்ளும் செய்யுள் வழக்கினுள்ளும் எ-று. ‘உள்ளவும்’ என்னும் உயர்வு சிறப்பும்மையும், ‘இல்லவும்’ என்னும் இழிவு சிறப்பும்மையும் எண்ணி நின்றன. வ-று: நெய்க்குடம், குளநெல், கார்த்திகைவிளக்கு, பூமரம், செந்தாமரை, குறுங்கூலி எனவும் உப்பளம், ஊர்மன்று, நாளரும்பு, இலைமரம், செம்போத்து, தோய்தயிர் எனவும் வழக்கின்கண் இனம் உள்ளனவும் இல்லனவும் வந்தன. “பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்” (குறள். 913), “கான்யாற் றடைகரை (இனிய. 5:3), “முந்நாட் பிறையின் முனியாது வளர்ந்தது” (நன். 400 மயிலை.), “கலவமாமயி லெருத்திற் கடிமல ரவிழ்ந்தன காயா” (சீவக. 1558:1), “சிறுகோட்டுப் பெரும்பழந்தூங்கி யாங்கிவள்” (குறுந். 18:4), “ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேல்” (சீவக. 1007:1) எனவும், “பொற்கோட் டிமயமும் பொதியிலும் போன்றே” (புறம். 2:24*), “வடவேங்கடந் தென்குமரி” (தொல். சிற. பாயி. 1), “வேனிற் கோங்கின் பூம்பொகுட்டன்ன” (புறம். 321:4), “சிறகர் வண்டு செவ்வழி பாட” (சீவக. 74:3), | | | “செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்” (புறம். 38:7-8), | “முழங்கு கடலோத மூழ்கிப் போக” (தொல். செய். 64* பேர்.) எனவும் செய்யுட்கண் இனம் உள்ளனவும் இல்லனவும் வந்தன. இனம் உள்ளனவற்றை வாளா கூறின் குறித்த பொருள் தோன்றாமையின் அடைகொடுத்து விதந்து கூறுக எனவும் இனம் இல்லனவற்றிற்கு அடை கொடுத்துக் கூறுதல் மிகையாம் ஆயினும் அமையும் எனவும் பொருள் போந்தமையின் முன்னையது வழுவற்க எனக் காத்தலும் பின்னையது வழுவமைப்பும் ஆம் என்க. | |
|
|