பக்கம் எண் : 474
  

நன்னூல் விருத்தியுரை
 

     ஆசிரியர் தொல்காப்பியனார்,
 
  “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே” (தொல். கிளவி. 18)
 
என்றமையின், ‘பொருண்முத லாறா மடை’ என்றும், ‘இரு வழக்கினும்’ என்றும்
இவ்விருமையும் பயின்று வரும் என்பது தோன்ற, ‘உள்ளவு மில்லவு மாம்’ என இனம்
உள்ளனவற்றோடு ஒருங்கு எண்ணியும் கூறினார் என்க. (50)
 

அடை அடுத்த மொழிகள் வருமாறு
 

{402}

அடைமொழி யினமல் லதுந்தரு மாண்டுறின்.
 
     எ-னின், மர’! வழுவற்க எனக் காத்தல் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: மேற் கூறிய, “அடைசேர் மொழி” (நூ. 401) இனத்தைத் தருதலே அன்றி,
அதனோடு இனம் அல்லதனையும் தரும் அவ்விடத்திற்குப் பொருந்தும் ஆயின் எ-று.

     ‘ஆண்டுறின்’ என்றமையான் பொருந்துவன கொள்க397 என்றார்.

     வ-று: பாவம் செய்தான் நரகம் புகும் என்ற துணையானே புண்ணியம் செய்தான்
சுவர்க்கம் புகும் என இனத்தைத் தருதலே அன்றி, அவன் இது செய்யின் இது வரும்
என்னும் அறிவிலி என்னும் இனம் அல்லதனையும் தந்தது. மேலைச்சேரிச் சேவல்
அலைத்தது என்ற துணையானே கீழைச்சேரிச் சேவல் அலைப்புண்டது என இனத்தைத்
தருதலே அன்றி, அச்சேவல் உடையார்க்கு வெற்றி ஆயிற்று என்னும் இனம்
அல்லதனையும் தந்தது.

     இனி இரட்டுற மொழிதலான், ‘இனமல் லதுந்தரும்’ என்பதற்கு இனத்தைத்
தருதலை ஒழித்து, இனம் அல்லதனையும் தரும் எனவும் பொருள் உரைத்துக்கொள்க.
அவை வருமாறு: சுமந்தான் வீழ்ந்தான் என்றால் சுமவாதான் வீழ்ந்தான் அல்லன்
என்னும் கருத்துச் சொல்லுவார்க்கு இன்று ஆதலின் அவ்வினத்தை ஒழித்துச், சுமையும்
வீழ்ந்தது என்னும் இனம் அல்லதனையும் தந்தது. காலை எழுந்து கருமத்திற் செல்வான்
கோழி கூவிற்று என்றால் ஏனைப் புட்கள் கூவுகில என்னும் கருத்து அவற்கு இன்று.
ஆதலின் அவ்வினத்தை ஒழித்துப், பொழுது புலர்ந்தது என்னும் இனம் அல்லதனைத்
தந்தது.
-----------------------------
     397இந்த உரை வாசகம் ஆறுமுக நாவலர் பதிப்பிலும் (1851. பக். 278-279)
சாமிநாதையர் பதிப்பிலும் (1925. பக். 221-222) சிறு வேறுபாட்டுடன் இருமுறை
அச்சிடப்பட்டுள்ளது; இடமாற்றமும் பெற்றுள்ளது.