| நன்னூல் விருத்தியுரை | பெய்முகில் அனையான் என்றால் கைம்மாறு கருதாத பெருங்கொடையாளன் என்னும் இனம் அல்லதனை இனம் இலதாகிய அடைமொழி தந்தது. இவ் அடை கொடாது முகில் அனையான் என வாளா கூறினும் இக்கொடைப் பொருள் தருமாலோ எனின் அவ்வாறு கூறின் முகில்வண்ணன் எனவும் பொருள்படும் ஆதலின் அதனை ஒழித்துக், கொடைப்பொருட்கு உரிமை செய்தது அவ் அடையேயாம் என்க. பிறவும் அன்ன. (51) | | அடைமொழிகள் சினை முதல்களோடு வருதல் | | 403. | அடைசினை முதன்முறை யடைதலு மீரடை முதலோ டாதலும் வழக்கிய லீரடை சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே. | எ-னின், மரபு வழுவற்க எனக் காத்தலும் மரபு வழுவமைப்பும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற் கூறிய (401) அடை சினை முதல்களை அடுத்து வருங்கால் ஓர் அடையும் ஒரு சினையும் ஒரு முதலும் ஒன்றை ஒன்று விசேடித்து வருதலும் இரண்டு அடை முதலை விசேடித்து வருதலும் வழக்குநடையாம். இரண்டு அடை சினையை விசேடித்து வருதலும் இவ்வரம்பு இறந்து வருதலும் செய்யுள்நடையாம் எ-று. ‘ஈரடை முதலோ டாதலும்’ என்றமையான், ‘முறை’ என்றது ஒன்றை ஒன்று விசேடித்து வருவது என்பதூஉம் அங்ஙனம் வரவே அடை பல, சினை பல வாராது ஒவ்வொன்று வரும் என்பதூஉம் பெற்றாம். வ-று: வேற்கை முருகன், நிலப்பூ நெரிஞ்சில், கார்த்திகைப் பூக்கொடி, பழக்குலை வாழை, செங்கால் நாரை, முழங்கு திரைக்கடல் எனவும் மனைச் சிறுகிணறு, சிறு கருங்காக்கை எனவும் வழக்கின்கண் வந்தன. “சிறுபைந் தூவியிற் செயிரறச் செய்த” (நன். 402 மயிலை.) எனவும், “கருநெடுங் கண்டருங் காம நோயே” (நன். 402 மயிலை.) எனவும், “பெருந்தோட் சிறுமருங்குற்பேரமர்க்கட் பேதை” (தொல். கிளவி. 26 இளம்.) எனவும் செய்யுட்கண் வந்தன. பிறவும் அன்ன. இவற்றுள், ‘அடைசினை முதன்முறை யடைதல்’ ஒன்றும் வழுவற்க எனக் காத்தலும் ஏனைய மூன்றும் நில்லாமையின் வழுவமைதியும் ஆம் என்க. | |
|
|