| நன்னூல் விருத்தியுரை | வளி உளரும் தன்மைத்து, உயிர் உணரும் தன்மைத்து என்னாது வளி உளரும், உயிர் உணரும் எனவும் உதாரணம்402 காட்டுவர். வளியின்கண்ணும் உயிரின்கண்ணும் உளர்தலும் உணர்தலும் ஆகிய செயல் நிகழ்ந்த துணையானே அவற்றிற்கு அவை செயற்கை ஆமன்றி இயற்கை ஆகாமையானும் அவ்வாறு கூறுதற்கு ஓர் விதி இன்மையானும் அவை பொருந்தா என்க. (53) | | செயற்கைப்பொருளைக் கூறுமாறு | | 405. | காரண முதலா வாக்கம் பெற்றுங் காரண மின்றி யாக்கம் பெற்றும் ஆக்க மின்றிக் காரண மடுத்தும் இருமையு மின்றியு மியலுஞ் செயும்பொருள். | எ-னின், மரபு வழுவற்க எனக் காத்தலும் மரபு வழுவமைப்பும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முதல் துணை நிமித்தங்களால் செய்யும் பொருளாகிய செயற்கைப்பொருளைக் கூறுங்கால் காரணச்சொல் முன் வர, ஆக்கச்சொல் பின் வரப்பெற்றும் காரணச்சொல் தொக்கு நிற்ப, ஆக்கச்சொல் வரப்பெற்றும் ஆக்கச்சொல் தொக்கு நிற்பக், காரணச்சொல் வரப்பெற்றும் இவ்விரு வகைச் சொல்லும் தொக்கு நிற்கவும் நடக்கும் எ-று. காரணச்சொல்லும் ஆக்கச்சொல்லும் யாண்டு வரினும் அந்நிலைக்களத்துத் தந்து பொருள் உரைக்கப்படுதலின், ‘காரண முதலா’ என்றார். வ-று: கடுவும் கை பிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின, எருப்பெய்து இளங்களை கட்டு, நீர் கால் யாத்தமையான் பயிர் நல்ல ஆயின எனவும் மயிர் நல்ல ஆயின, பயிர் நல்ல ஆயின எனவும் கடுவும் கை பிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல, எருப் பெய்து இளங்களை கட்டு, நீர் கால் யாத்தமையான் பயிர் நல்ல எனவும் மயிர் நல்ல, பயிர் நல்ல எனவும் வரும். --------------------------------- 402இளம்பூரணர் (தொல். கிளவி. 19) முதலிய தொல்காப்பிய உரையாசிரியர்களும் மயிலைநாதரும் (நன். 403) வைத்தியநாத தேசிகரும் (இல. விள. 313) இவ்வாறு உதாரணம் காட்டுவர். | |
|
|