| நன்னூல் விருத்தியுரை |
| | “பல்லார்தோ டோய்ந்து வருதலாற் பாய்புனல் நல்வய லூரநின் றார்புலால் - புல்லெருக்கம் மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையாற் காதற்றாய் நாறு மெமக்கு” (தொல். கிளவி. 56* இளம்.) |
எனப் பரத்தையிற் பிரிந்த தலைவனைப் புலந்தும் அவன் செய்த தீங்கினைத் தன் இனிய முகத்தால் தணிக்கும் புதல்வனை உவந்தும் ஒன்று ஒன்று ஆகாதனவற்றை ஆயினபோற் கூறும்வழி ஆக்கச்சொல் தொக வருதலும் அதன்பாற் படுத்துக. பிறவும் அன்ன. காரண முதலா ஆக்கம் பெறுதல் ஒன்றும் வழுவற்க எனக் காத்தலும் ஏனைய மூன்றும் வழுவமைதியும் ஆம் என்க. (54) |
| விடைமரபு வழுவாமல் காத்தல் |
| 406. | தம்பா லில்ல தில்லெனி னினனாய் உள்ளது கூறி மாற்றியு முள்ளது சுட்டியு முரைப்பர் சொற்சுருங் குதற்கே. |
எ-னின், மரபு வழுவற்க எனக் காத்தல் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒருவன் வினவியது தம்பக்கல் இல்லை ஆயின் அதனை இல்லை என்னலுறின் அவன் வினவியதற்கு இனமாய்த் தம்பக்கல் உள்ளதனைக் கூறி, அக்கூற்றானே அதனை இல்லை என்றும் உள்ளது ஆயின் இத்துணை உண்டு என்றும் கூறுவர் புலவர் வினவுதலும் செப்புதலும் ஆகிய சொற்கள் சுருங்குதற்பொருட்டு எ-று. குன்றக் கூறல் முதலிய குற்றங்கள் (12) நீக்கிச், சுருங்கச் சொல்லல் முதலிய அழகொடு (13) கூறுதல் வழக்கிற்கும் வேண்டும் என்பார், ‘சொற்சுருங் குதற்கே’ என்றார். வ-று: பயறு உண்டோ வணிகீரே என்றார்க்கு அஃது இன்று என்பார் உழுந்து உண்டு, உழுந்தும் துவரையும் உண்டு என்க. இவ் இனமொழிகள் பயறு இல்லை என்னும் இறை பயந்து நிற்றலின், ‘இனனாய் உள்ளது கூறி மாற்றியும்’ என்றார். அஃது உண்டு என்பார் இத்துணை உண்டு என்க. நூறு விற்கும் பட்டாடை உண்டோ என்றார்க்கு அஃது இன்று என்பார் ஐம்பது விற்கும் கோசிகம் உண்டு என்க. அஃது உண்டு என்பார் எண்பது விற்பது உண்டு என்க. பிறவும் அன்ன. |