பக்கம் எண் : 479
  

நன்னூல் விருத்தியுரை
 

     இவ்வாறன்றி உழுந்தல்லது இல்லை; இத்துணைப் பயறு உள என உதாரணம்
காட்டுவாரும்403 உளர். அவை, ‘சொற்சுருங் குதற்கே’ என்பதனோடு மாறுபட்டு,
மிகைபடக் கூறல் என்னும் குற்றம் (12) ஆம் என்க. (55)
 

இரக்கும் சொற்கள் வழங்குமாறு
 

{407}

ஈதா கொடுவெனு மூன்று முறையே
இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: ஈ என்பது இழிந்தோன் உயர்ந்தோன்மாட்டு இரக்கும் சொல்லாம்; தா
என்பது ஒப்போன் ஒப்போன்மாட்டு இரக்கும் சொல்லாம்; கொடு என்பது உயர்ந்தோன்
இழிந்தோன்மாட்டு இரக்கும் சொல்லாம் எ-று.

     வ-று: தந்தை ஈ, தோழ தா, மைந்த கொடு என வரும். பிற வழி வரும் ஒப்பு,
உயர்வு, தாழ்வினும் இவ்வாறே ஒட்டுக.

     வழங்கு, வீசு, நல்கு என்றல் தொடக்கத்து இரப்புரைகள் போலாது ஈவோர்க்கும்
ஏற்போர்க்கும் ஒப்பு உயர்வு தாழ்வுகளை, ‘ஈதா கொடு’ என்ற துணையானே உணர்த்தி
நிற்றலின் இவற்றை, “இனைத்தென் றறிபொரு” ளாகக் (நூ. 399) கூறினார். அருள், அளி
என்னும் இரப்புரைகள் ஈவோர்க்கு உயர்வும் ஏற்போர்க்கு இழிவும் உணர்த்தினவாலோ
எனின் அவை கருணைக்கு உரிய சொற்குறிப்பினான் இரத்தற்பொருளை உணர்த்தி
நின்றனவன்றி இரப்புரை அல்ல என்க.

     இம்மரபு மயங்கி வருவன உளவேல், “புதியன புகுதலும், வழுவல” (நூ. 462)
என்றதன்பாற் படுத்துக. (56)
 

குறிப்பால் பொருள் உணரப்படும் சொற்கள்
 

{408.}

முன்னத்தி னுணருங் கிளவியு முளவே.
 
     எ-னின்404 மரபு வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: வெளிப்படையான் அன்றிக் குறிப்பால் பொருள் உணரப்படும் சொற்களும்
சில உளவாம் எ-று.

-------------------------------
     403மயிலைநாதர் (நன். 405) இவ்வாறு உதாரணம் காட்டுவார்.
     404இது தொல்காப்பிய (எச்ச. 63) நூற்பாவின் முற்பகுதி.