பக்கம் எண் : 480
  

நன்னூல் விருத்தியுரை
 

     அவையாவன: “ஒன்றொழி பொதுச்சொல்” (நூ. 269) முதல் சொல்லுவான் குறிப்பு
ஈறாக விதந்தன முதலியனவாம்.

     செவி எல்லாம் சாலச் செம்பொன் அணியும் செல்வத்தினர் என்பார்
செஞ்செவியர் என்றும் குற்றமற்ற மரபினர் என்பார் வெள்ளொக்கலர் என்றும்
பெருவாழ்க்கையினர் என்பார் குழைகொண்டு கோழி எறியும் வாழ்க்கையர்405 என்றும்
கூறும் சொல்லுவான் குறிப்பு ஒன்றுமே உதாரணம் காட்டுவாரும்406 உளர். அங்ஙனம்
ஆயின் ஏனைய குறிப்பின் பொருள் தரும் மொழி அல்லவாம் என்க.

     கேட்போர் இடர்ப்படாது வெளிப்படையில் கூறுதல் மரபு ஆதலின் இது
வழுவமைதி ஆயிற்று. (57)
 

மரபு வழுவமைப்பு
 

409.

கேட்குந போலவுங் கிளக்குந போலவும்
இயங்குந போலவு மியற்றுந போலவும்
அஃறிணை மருங்கினு மறையப் படுமே.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: கேளாதனவற்றைக் கேட்குவனபோலவும் சொல்லாதனவற்றைச்
சொல்லுவனபோலவும் நடவாதனவற்றை நடப்பனபோலவும் இத்தொழில்கள் அல்லன
பிற செய்யாதனவற்றைச் செய்வனபோலவும் அஃறிணையிடத்தும் சொல்லப்படும் எ-று.

     முன்னையபோல விதவாது இறுதிக்கண், ‘இயற்றுந’ எனப் பொதுப்படக்
கூறினமையின் இத்தொழில்கள் அல்லன பிற என்னும் சொல் எஞ்சி நின்றன.

     வ-று: “நன்னீரை வாழி யனிச்சமே” (குறள். 1111), “இரவெலா நின்றாயா
லீர்ங்கதிர்த் திங்காள்” (நன். 408 மயிலை.) எனவும், “பகைமையுங் கேண்மையுங்
கண்ணுரைக்கும்” (குறள். 709),
 
  “மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலுந்
தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால்” (சீவக. 2932:1-2)
 
எனவும் இவ்வழி அவ்வூர்க்குப் போம், இவ்வரசன் ஆணை எங்கும் செல்லும் எனவும்,
-------------------------------
     405“கோழி எறியும் அவர் வாழ்க்கை” என்பது ஆறுமுக நாவலர் பாடம்.
     406இளம்பூரணர் (தொல். எச்ச. 62), சேனாவரையர் (தொல். எச்ச. 63),
மயிலைநாதர் (நன். 407), வைத்தியநாத தேசிகர் (இல. விள. 354) ஆகியோர்
இவ்வாறு உதாரணம் காட்டுவர்.