பக்கம் எண் : 484
  

நன்னூல் விருத்தியுரை
 

மறிபாப்புப் பொருள்கோளும் கொண்டுகூட்டுப் பொருள்கோளும் அடிமறிமாற்றுப்
பொருள்கோளும் எனப் பொருள்கோள் எட்டாம் எ-று.

     இவற்றுள் தாப்பிசை என்பதற்கு ஊசல்போல் இடை நின்று இருமருங்கும்
செல்லும் சொல் என்பது பொருள். தாம்பு என்பது ஊசல். அஃது அளை மறி பாம்பு
என்பது பாப்பு என நின்றாற்போல வலிந்து நின்றது. ஏனையவும் காரணக்குறி ஆதல்
காண்க. (60)

யாற்றுநீர்ப் பொருள்கோள்
 

412.

மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள்
அற்றற் றொழுகுமஃ தியாற்றுப் புனலே.
 
     எ-னின், நிறுத்த முறையானே (411) யாற்றுநீர்ப் பொருள்கோள் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: மொழிமாற்று முதலியபோல் பிறழ்ந்து செல வேண்டாது யாற்றுப்புனல்
ஒழுக்குப்போல் நெறிப்பட்டு, அடிதோறும் வான்பொருள் அற்று அற்று ஒழுகும்
அப்பொருள்கோள் யாற்றுநீர்ப் பொருள்கோளாம் எ-று.

     இடையறாது ஒழுகும் யாற்றுநீர் ஒழுக்கு உவமை ஆதலின் அடிதொறும்
வான்பொருள் அற்று அற்று ஒழுகுதலாவது மொழிமாற்று முதலியபோல் பிறழ்ந்து
செல்லும் செலவற்று ஆங்காங்கு அமைந்து ஒழுகுதல் ஆமன்றி, அடிதோறும் பொருள்
முடிதல் அன்றாம் என்க. அங்ஙனம் ஆயின் ஆங்காங்கு எனப் பொதுப்படக் கூறாது,
‘அடிதொறும்’ என்றது என்னை எனின் அவ்வாறே கூறுவார் ஓர் இலக்கணைமேல்
வைத்துக் கூறினார் என்க.

வ-று:
 
  “சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்ததவே” (சீவக. 53)
 
என வரும். இப்பாட்டினுள் சொல் என்னும் எழுவாயினை முதல் எடுத்து, அதன்
தொழிலாகிய வினையெச்சங்கள் ஒன்றனை ஒன்று கொள்ள இடையே முறை நிறீஇக்,
காய்த்த என்னும் பயனிலையை இறுதிக்கண் தந்து முடித்தமையின் இப்பொருள்