பக்கம் எண் : 485
  

நன்னூல் விருத்தியுரை
 

ஒழுகுதல் யாற்றுநீர் ஒழுக்குப் போறல் காண்க.

     இதற்கு இவ்வாறன்றி, ஏனை அடிகளை நோக்காது அடிதோறும் பொருள் முடிந்து வருவது யாற்றுநீர்ப் பொருள்கோள் எனப் பொருள் உரைத்து,
 
  “அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றஞ்
சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றங்
கொலைப்பாலுங் குற்றமே யாம்” (நான்மணி. 100)
 
என உதாரணம் காட்டுவாரும்408 உளர். யாற்றுநீர் ஒழுக்குக்கு இடையறுதல்
இன்மையானும் அற்றதேல் அதனை ஒழுக்கு என்றல் கூடாமையானும் அஃது உவமை
அன்றாம். ஒவ்வோர் அடி ஒழுகுதற்கு உவமை ஆயிற்று எனின் பாட்டு முழுவதும்
இடையறாது ஒழுகிப் பயின்று வரும் பொருள்கோள் மொழிமாற்று முதலியவற்றுள்
அடங்காமையின் குன்றக் கூறலாம். இங்ஙனம் ஆதலின் அது பொருள் அன்றாய்409
அவர் காட்டிய உதாரணம் அடிமறிமாற்றின்பாற் படும் என்க. அப்பொருள்கோளின்
விகற்பம் அச்சூத்திரத்துள் (419) தோன்றக் கூறுதும்.

     இதனை, ‘வான்பொருள்’ என்றார் இது நெறிப்பட்டு வருதலானும் பயின்று
வருதலானும் மொழிமாற்று முதலிய வந்த செய்யுட்கண்ணும் விராய் வருதலானும் என்க.(61)
 

மொழிமாற்றுப் பொருள்கோள்
 

{413}

ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
மாற்றியோ ரடியுள் வழங்கன்மொழி மாற்றே.
 
     எ-னின், மொழிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இரண்டு மொழியும் அவை கொள்ளும் இரண்டு பயனிலையுமாய்
வரக்கூறுவார் அந்நான்கனுள் ஏற்ற பயனிலைகட்கு இயையும் மொழிகளைத் தனித்தனி
கூட்டிக் கூறாது, ஏலாத பயனிலைகட்கு இயையாத மொழிகளைத் தனித்தனி கூட்டி, ஓர்
அடியுள்ளே கூறும் பொருள்கோள் மொழிமாற்றுப் பொருள்கோளாம் எ-று.

     ஒன்றற்கு ஒன்று பொருந்தியது என்பார், ‘ஏற்ற பொருளுக் கியையு மொழி’
என்றார்.
-------------------------------
     408யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் (நூ. 95), மயிலைநாதர்
(நன். 411), வைத்தியநாத தேசிகர் (இல. விள. 362) முதலியோர் இவ்வாறு
உதாரணம் காட்டுவர்.
     409“அது பொருள் அன்றாம்.” என்பது ஆறுமுக நாவலர் பாடம்
.