பக்கம் எண் : 487
  

நன்னூல் விருத்தியுரை
 

  வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினும்
நேரும் பொருள்கோ ணிரனிறை நெறியே.
 
     எ-னின், நிரனிறைப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: பெயரும் வினையும் ஆகிய சொற்களையும் அவை கொள்ளும் பெயரும்
வினையும் ஆகிய பயனிலைகளையும் வேறு வேறு நிரையாக நிறுத்தி, முறையாயேனும்
எதிராயேனும் இதற்கு இது பயனிலை என்பது படக் கூறும் பொருள்கோள் நெறிப்பட்ட
நிரனிறைப் பொருள்கோளாம் எ-று.

      வ-று:
 
  “கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி
மதிபவள முத்த முகம்வாய் முறுவல்
பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்
வடிவினளே வஞ்சி மகள்” (யா. வி. 95*)
 
இது பெயர்ச்சொற்களும் பெயர்ப் பயனிலைகளுமாய் நின்ற முறை நிரனிறை.
 
  “காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியான்
மண்ணமிர்த மங்கையர்தோண் மாற்றாரை யேற்றார்க்கு
நுண்ணிய வாய பொருள்” (யா. வி. 95)
 
இது வினைப் பயனிலைகளும் பெயர்ச்சொற்களுமாய் நின்ற முறை நிரனிறை.
 
  “களிறுங் கந்தும் போல நளிகடற்
கூம்புங் கலனுந் தோன்றுந்
தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே” (யா. வி. 95)
 
இது பெயர்ச்சொற்களும் பெயர்ப் பயனிலைகளுமாய் நின்ற எதிர் நிரனிறை.
 
  “ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமு மூரகமும் பஞ்சரமா - நீடியமால்
நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ
மன்றார் மதிற்கச்சி மாண்பு” (யா. வி. 95*)