| நன்னூல் விருத்தியுரை |
இது பெயர்ச்சொற்களும் வினைப் பயனிலைகளுமாய் நின்ற எதிர் நிரனிறை. பிறவும் அன்ன. மேலைச் சூத்திரத்துள், “மொழி” (நூ. 413) என்றும் இச்சூத்திரத்துள், ‘சொல்’ என்றும் கூறிய, “நிறுத்த சொல்”லும் (தொல். புணர். 5) அது கொள்ளும் பயனிலை எனினும் பொருள் எனினும் ஒக்கும், “குறித்துவரு கிளவி”யும் (தொல். புணர். 5) அன்றி, அல்வழி வேற்றுமை உருபுகளும் பிற சொற்களும் உடன் வருமாலோ எனின் சாத்தன் வந்தான் என்றால் அவன் ஆடை, அணி முதலியனவும் உடன் வருதல் கூறாதே அமைதல் போலும் என்க. |
| | “சொற்றொறு மிற்றிதன் பெற்றி” (நூ. 461) என்பதனானே, “காமவிதி கண்முக மென்மருங்குற் செய்யவாய் தோமி றுகடினி சொல்லமிர்தந் - தேமலர்க் காந்தள் குரும்பை கனக மடவாள்கை ஏந்திளங் கொங்கை யெழில்” (யா. வி. 95*) என வரும் எழுத்து நிரனிறையும், “வெண்பா முதுலாக வேதிய ராதியா மண்பால் வகுத்த வருணமா - மொண்பா இனங்கட்கு மிவ்வாறே யென்றுரைப்பர் தொன்னூல் மனந்திட்பக் கற்றோர் மகிழ்ந்து” (யா. வி. 55*) |
எனத் தொகுத்துக் கூறும் நிரனிறை முதலியவும் கொள்க. |
| | “அம்ம் பவள்ள் வரிநெடுங்கண் ணாய்வஞ்சிக் கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கின் அரும்ம் பவண்முலை யொக்குமே யொக்குங் கரும்ம் பவள்வாயிற் சொல்” (யா. வி. 3*) |
என்னும் யாற்றுநீர்ப் பொருள்கோளை மயக்க நிரனிறை என்பாரும்413 உளர். இது சொல்லையும் பொருளையும் தனித்தனி நிறீஇக் கூறியதன்றி நிரனிறையாக நிறீஇக் கூறாமையின் நிரனிறை அன்று என்பார், ‘நெறியே’ என்றார். (63) |
---------------------------------- 413யாப்பருங்கலம் உடையார் இவ்வாறு காட்டியதாக மயிலைநாதர் (நன். 413) குறிப்பிடுவார். ஆனால் இவ்வுதாரணம் அப்பகுதியில் இல்லை. |