பக்கம் எண் : 489
  

நன்னூல் விருத்தியுரை
 

பூட்டுவிற் பொருள்கோள்
 

{415}

எழுவா யிறுதி நிலைமொழி தம்முட்
பொருணோக் குடையது பூட்டுவில் லாகும்.
 
     எ-னின், பூட்டுவிற் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: செய்யுட்கண் முதலினும் ஈற்றினும் நிற்கும் மொழிகள் தம்முள் பொருள்
நோக்கமுடைய பொருள்கோள் பூட்டுவிற் பொருள்கோள் ஆம் எ-று.

     செய்யுட்கு எல்லாம் முதலினும் ஈற்றினும் என்னாமையின் அதனகத்து எங்ஙனம்
இவ்வாறு வரினும் ஆம் என்க.

     வ-று:
 
  “திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாதர்
இறந்து படிற்பெரிதா மேத - முறந்தையர்கோன்
தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு” (முத்.*)
 
என வரும். பிறவும் அன்ன. (64)
 

தாப்பிசைப் பொருள்கோள்
 

416.

இடைநிலை மொழியே யேனையீ ரிடத்தும்
நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை.
 
     எ-னின், தாப்பிசைப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இடை நிற்கும் மொழி, ஒழிந்த முதலினும் ஈற்றினும் சென்று பொருளைக்
கூடும் பொருள்கோள் தாப்பிசைப் பொருள்கோளாம் எ-று.

     வ-று:
 
  “உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு” (குறள். 255)
 
என வரும்.